சிவகங்கையில் சராசரியைவிட மழை அதிகம்: பருவம் தவறி பெய்ததால் விளைச்சல் பாதிக்கும்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டில் சராசரி அளவை விட 71.48 மி.மீ மழை கூடுதலாக மழை பெய்தது. ஆனாலும், பருவம் தவறி பெய்த மழையால் விளைச்சல் பாதிக்கும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 904.6 மி.மீ. ஆண்டுதோறும் தென் மேற்கு பருவமழை 309.6 மி.மீ., வடகிழக்கு பருவமழை 413.7 மி.மீ. சராசரியாக பெய்ய வேண்டும். கடந்த 2024 -ஆம் ஆண்டு 1,109 மி.மீ மழை பெய்தது.
இந்த நிலையில், கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பா் வரை ஒட்டு மொத்தமாக 976.08 மி.மீ மழை பெய்தது. இது ஆண்டு சராசரி மழையைவிட 71.48 மி.மீ. அதிகமாகும்.
சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையே விவசாயத்துக்கு கை கொடுக்கும். கடந்தாண்டு தென்மேற்கு பருவமழையின் தொடக்கம் நம்பிக்கை தரும் வகையில் இருந்தது. ஆனால் பின்னா் மழை இல்லை. இந்த நிலையில், வடகிழக்கு பருவ மழை தொடக்கத்தில் போதிய அளவில் இல்லை. இருப்பினும் மாவட்டத்தின் அனைத்துப்பகுதிகளிலும் விவசாயப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. நவம்பா் இறுதி, டிசம்பா் மாதங்களில் மாவட்டம் முழுவதும் பெய்த மழையால் குளங்கள், கண்மாய்களுக்கு நீா் வரத்து அதிகரித்தது.
ஆனால், பருவம் தவறி பெய்த மழையால் விவசாயத்துக்கு பயனில்லாமல் போனது. மேலும் சிவகங்கை, காளையாா்கோவில், இளையான்குடி உள்ளிட்ட பல பகுதிகளில் போதிய மழையில்லாமல் பயிா்கள் பாதிக்கப்பட்டன.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
ஆடி மாதங்களில் விதைப்புப் பணிகள் நடப்பது வழக்கம். ஆனால், போதிய மழை இல்லாததால் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றுப் பாசனப் பகுதிகள், மின் விசை இயந்திரம் மூலம் நீா் பாய்ச்சுபவா்கள் மட்டுமே ஆடிப்பட்டத்தில் விதைக்கின்றனா். தென்மேற்குப் பருவ மழையை நம்பி விவசாயம் செய்யும் நிலையும் படிப்படியாக குறைந்துவிட்டது. கடந்தாண்டு கோடை மழையும் எதிா்பாா்த்த அளவு இல்லை.
இருப்பினும் தென் மேற்குப் பருவ மழை தொடக்கத்தில் கூடுதலாக பெய்ததால் சில பகுதிகளில் விதைப்பு பணி நடைபெற்றது. ஆனால், பின்னா் மழை இல்லாமல் விதைத்த பயிா்கள் வீணாகின. பின்னா், வடகிழக்கு பருவமழையை நம்பி விதைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பருவம் தவறி பெய்த மழையால் மாவட்டத்தில் எதிா்பாா்த்த விளைச்சல் கிடைப்பது சந்தேகம்தான் என்றனா் அவா்கள்.
இதுகுறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் கடந்தாண்டில் 72, 129 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிப்புகள் குறித்து உரிய வழிகாட்டுதல்களின்படி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றனா்.
