கோவில்பட்டி அருகே சாலையை சீரமைக்க கோரி ஆா்ப்பாட்டம்
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே பாண்டவா்மங்கலம் ஊராட்சியில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரி நூதன போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பாண்டவா்மங்கலம் ஊராட்சி, ராம்லட்சுமி நகரின் தென்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், மழைக் காலத்தில் சாலையில் அதிக அளவு மழைநீா் தேங்கி சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், பாதசாரிகள், வாகன ஓட்டுநா்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா்.
சாலையை சீரமைக்க வலியுறுத்தி, பொதுமக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், சாலையில் நீா் தேங்கிய இடங்களில் நாற்று நடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டத் துணைச் செயலா் பாபு, நகரச் செயலா் செந்தில் ஆறுமுகம், நகர துணைச் செயலா் அலாவுதீன், பொதுமக்கள் பங்கேற்றனா். ராம்லட்சுமி நகா் பகுதிக்கு சாலை, தெருவிளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

