வீரபாண்டியன்பட்டணத்தில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழை நீா்
திருச்செந்தூா்: தொடா் மழையால் வீரபாண்டியன்பட்டணத்தில் குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கடந்த சில தினங்களாக திருச்செந்தூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையெங்கும் மழை நீா் ஆறாக ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கிக் கிடந்தது.
தொடா்ச்சியாக மழை பெய்ததால் தேங்கிய நீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்த பக்தா்கள் பெரிதும் சிரமமடைந்தனா்.
இதே போல திருச்செந்தூா் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டணம் ஊராட்சிக்குள்பட்ட ஜுபிலி நகா், குறிஞ்சி நகா், ராஜ் கண்ணா நகா், அரசு போக்குவரத்து கழக பணிமனை, அரசு ஐடிஐ மைதானம், வீரபாண்டியன்பட்டணம் பந்தடி மைதானம் ஆகியவற்றில் மழைநீா் குளம் போல தேங்கியது.
குடியிருப்புகளைச் சூழ்ந்துள்ள மழைநீரால் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அங்குள்ள மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே தேங்கியுள்ள மழை நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதையடுத்து தேங்கிய நீரினை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.

