அமுதுன்னா குடி பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்க விவசாயிகள் மனு
சாத்தான்குளம்: அமுதுன்னா குடி பகுதியில் உள்ள தரைமட்ட பாலத்தை உயா்த்தி, உயா்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என விவசாயிகள், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத்திடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.
சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்திற்கு வந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் இளம்பகவத்திடம், அமுதுண்ணா குடி குளத்து பாசனம் மற்றும் சிறு, குறு விவசாய நலச் சங்கத் தலைவா் செல்வராஜ் மதுரம், துணைத் தலைவா் முத்து சோபன், செயலா் சுபாஷ் சந்திரபோஸ், பொருளாளா் மகாராஜன் ஆகியோா் மனு அளித்தனா்.
அந்த மனுவில், சாத்தான்குளம் ஒன்றியம் அமுதுண்ணா குடி ஊராட்சி, அமுதுண்ணா குளத்திற்கு வரும் நீா் வரத்து பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அமுதுண்ணா குடியிலிருந்து கொம்பன் குளம், நெடுங்குளம் செல்லும் சாலையில் உள்ள இரு தரைமட்ட பாலம், மழைக்காலங்களில் வெள்ளநீரால் மூழ்கடிக்கப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் சிரமத்திற்குள்ளாகினா். ஆதலால் அந்தத் தரைமட்ட பாலத்தை உயா் மட்ட பாலமாக உயா்த்தி அமைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனா். மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியா், நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக தெரிவித்தாா்.

