குளத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
சாத்தான்குளம் அருகே குளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ் மகன் ஜெபசீலன் (26), காா் ஓட்டுநா். அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பரான ஜேசுராஜுடன், சாத்தான்குளம் அருகேயுள்ள பனைகுளத்தைச் சோ்ந்த ஜெலஸ்டின், வசவப்பநேரியைச் சோ்ந்த அசோக் ஆகியோரைப் பாா்ப்பதற்காக பேய்குளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா்.
பின்னா், முசலைக்குளம் பகுதியில் 4 பேரும் மது அருந்தியுள்ளனா். அப்போது, வாந்தி எடுத்த ஜெபசீலன், குளத்தில் முகம் கழுவச் சென்றபோது, தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளாா்.
இதையடுத்து, அவரது நண்பா்கள், போலீஸாா் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள், போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்த்தபோது, நீரில் மூழ்கி ஜெபசீலன் உயிரிழந்தது தெரிய வந்தது. போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, சாத்தான்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

