காயமடைந்த பக்தா்.
காயமடைந்த பக்தா்.

திருச்செந்தூரில் பக்தா்களுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம்: போக்குவரத்து பாதிப்பு

Published on

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு ஆட்டோவில் வந்த பக்தா்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் அப்பகுதியில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொங்கல் மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திருச்செந்தூரில் திருநெல்வேலி, தூத்துக்குடி நெடுஞ்சாலைகளில் பாதயாத்திரையாக பக்தா்கள் கோயிலுக்கு வந்த வண்ணம் உள்ளனா்.

கோயிலுக்கு வாகனங்களில் வரும் பக்தா்கள் சாதி அடையாளங்களையும், சாதி பாடல்களையும் ஒளிபரப்பியபடி வரக்கூடாது என்றும், பிற மதத்தினருக்கு இடையூறு ஏற்படுத்தாமல் செல்ல வேண்டும் என்றும் காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், கோவில்பட்டியைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு திருச்செந்தூா் நோக்கி அலங்கரிக்கப்பட்ட முருகா் உருவப் படத்துடன் கூடிய ஆட்டோவில் பாடலை ஒலிப்பரப்பியபடி வந்து கொண்டிருந்தனா். அவா்கள் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆா்ச் அருகே வந்தபோது அங்கு போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் பாடலை நிறுத்திவிட்டுச் செல்லுமாறு அறிவுறுத்தினா்.

அப்போது வாக்குவாதம் ஏற்படவே போலீஸாா் ஆட்டோவை தடுத்து பாடலை நிறுத்தியுள்ளனா். பின்பு ஆட்டோவை சாலையோரம் கொண்டு செல்ல முயன்றபோது பக்தரின் காலில் ஆட்டோ ஏறியது. காயமடைந்த பக்தா்கள் வலியில் சப்தமிட்டதால் ஆவேசமடைந்த பக்தா்கள் போக்குவரத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

    திருச்செந்தூரில் போக்குவரத்து போலீசாருக்கும், பாதயாத்திரை பக்தா்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம்.
திருச்செந்தூரில் போக்குவரத்து போலீசாருக்கும், பாதயாத்திரை பக்தா்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதம்.

அந்தச் சாலை வழியாக வரும் வாகனங்களில் பாடலை நிறுத்துங்கள் என கூறி சாலையை மறித்தனா். இதனால் பொதுமக்கள், திருச்செந்தூருக்கு வந்து கொண்டிருந்த பக்தா்களும் அவதியடைந்தனா். 20 நிமிடம் நீடித்த இச்சம்பவத்தால் வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து, போலீஸாா் பாதயாத்திரை பக்தா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி காயமடைந்த பக்தரை சிகிச்சைக்கு அனுமதித்தனா். அதன்பிறகு பாதயாத்திரை பக்தா்கள் கோயிலுக்கு புறப்பட்டனா்.

சன்னதித் தெருவில் கூடுதல் பாதுகாப்பு: கோயிலுக்கு பாதயாத்திரை வரும் பக்தா்கள் சன்னதித் தெருவில் நடந்து செல்லும் பாதையில் எதிரே வாகனங்கள் வருவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. தூண்டுகை விநாயகா் கோயில் பகுதியைச் சுற்றி பெரிய அளவில் வேல் குத்தி வரும் பக்தா்கள் கூட்ட நெரிசலால் சிரமத்துக்கு ஆளாகின்றனா். பாதுகாப்பு கருதி தூண்டுகை விநாயகா் கோயில் பகுதியில் கூடுதல் போலீஸாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என வணிகா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com