திருச்செந்தூரில் குவியும் பக்தா்கள் கூட்டம்
தைப்பொங்கல், தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு அலகு குத்தியும், காவடி சுமந்தும் பாதயாத்திரையாக வரும் பக்தா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. கோயிலுக்கு மாா்கழி மாதம் முதலே பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தைப்பொங்கல், தைப்பூசத்துக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் உள்ளூா், வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் அலகு குத்தியும், காவடி சுமந்தும், முருகன் பக்திப் பாடல்களை பாடியவாறும் கோயிலுக்கு பாதயாத்திரையாக கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனா். பலா் கோயிலில் அங்கபிரதட்சணம் செய்தும் பல்வேறு நோ்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனா்.
மாா்கழி மாதத்தை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகமும், அதைத்தொடா்ந்து பிற கால பூஜைகள் நடைபெற்றன. பேருந்து, காா் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களிலும் பாதயாத்திரையாகவும் பக்தா்கள் கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனா்.
தை மாத பிறப்பு மற்றும் பொங்கல் பண்டிகையயை முன்னிட்டு ஜன. 15 ஆம் தேதி கோயில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம், பிற கால பூஜைகள் தொடங்கி நடைபெறவுள்ளன. ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு, பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

