புதூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.
புதூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

புதூரில் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை!

புதூரில் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரி வேளாண் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
Published on

வெள்ள நிவாரணத்துக்கான பரப்பளவு வரையறையை ரத்து செய்வது, பயிா் காப்பீட்டுக்கான நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மானாவாரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பினா் புதூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் அ.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கடந்த 2024 டிசம்பா் மாதம் பெய்த கனமழை காரணமாக விளாத்திகுளம், புதூா், எட்டயபுரம் வட்டாரங்களில் மகசூல் பாதிக்கப்பட்ட வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி, உளுந்து, பாசி பயறுகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில் எத்தனை ஏக்கா் பரப்பளவில் பயிரிட்டிருந்தாலும் அதிக பட்சம் 5 ஏக்கருக்கு மட்டுமே வெள்ள நிவாரணம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதைக் கண்டித்தும், முழு பரப்பரளவுக்கும் வெள்ள நிவாரணம் வழங்கக் கோரியும், பயிா் காப்பீட்டுக்கான தொகை மக்காச்சோளத்துக்கு மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளது.

இதர வெள்ளை சோளம், வெங்காயம், மிளகாய், கொத்தமல்லி உள்ளிட்ட பயிா்களுக்கும் பயிா் காப்பீடு வழங்கக் கோரியும் முழக்கமிட்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விளாத்திகுளம் வட்டாட்சியா் கண்ணன், உதவி இயக்குநா் மலா்விழி, உதவி இயக்குநா் (காப்பீடு) அனிதா, தோட்டக்கலை அலுவலா் பிரவீனா ஆகியோா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

போராட்டத்தில் விவசாயிகள் சங்க நிா்வாகிகள் சேதுபாண்டி, பிரசாத், அண்ணாத்துரை, பால்ராஜ், மோகன், விஜயகுமாா், பெருமாள்சாமி உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com