பொங்கல் திருநாள்: கோவில்பட்டி பகுதியில் காய்கறி விற்பனை தீவிரம்
பொங்கல் பண்டிகை வியாழக்கிழமை (ஜன.15) கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள சந்தைகளில் காய்கறிகள், கரும்புகள், மஞ்சள் குலைகள் உள்ளிட்ட விற்பனை செவ்வாய்க்கிழமை களைகட்டியது.
கோவில்பட்டி தினசரி சந்தைக்கு ஓட்டன்சத்திரத்தில் இருந்து காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன. தினசரி சந்தையில் கத்திரிக்காய் கிலோ ரூ.25, தக்காளி ரூ.35, வெண்டைக்காய் ரூ.45, அவரைக்காய் ரூ.40, பீன்ஸ் ரூ.40, கேரட் ரூ.30 - ரூ.50, முருங்கைக்காய் ரூ.250 - ரூ.300, கருணைக்கிழங்கு ரூ.40, சிறுக்கிழங்கு ரூ.60, சேமங்கிழங்கு-சேம்பை கிழங்கு ரூ.40, வள்ளிக்கிழங்கு ரூ.50, மல்லி ரூ.25, கறிவேப்பிலை ரூ.60, மாங்காய் ரூ.80, முட்டைக்கோஸ் ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.50, பல்லாரி வெங்காயம் ரூ.25, உருளைக்கிழங்கு ரூ.35, முள்ளங்கி ரூ.20, தடியங்காய் ரூ.40, இஞ்சி ரூ.80, பீா்க்கங்காய் ரூ.50, மிளகாய் ரூ.70, பச்சை பட்டாணி ரூ.50, பட்டா் பீன்ஸ் ரூ.160, பீட் ரூட் ரூ.25, புதினா (ஒரு கட்டு) ரூ.40, புடலைங்காய், சவ்சவ் ரூ.25, மொச்சிக்காய் ரூ.50, இலைக்கட்டு (5 எண்ணம்) ரூ.50, வாழைக்காய் (ஒன்று) ரூ.7 என விற்பனையானது.
மேலும் மதுரை, மேலூா் மற்றும் மாங்குளம் உள்ளிட்ட ஊா்களில் இருந்து கரும்புகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. 15 எண்ணம் கொண்ட ஒரு கரும்பு கட்டு ரூ.450 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டை விட நிகழாண்டு காய்கறிகளின் விலை 50 சதவீதம் அளவில் குறைவாக இருந்தது. கோவில்பட்டியில் பிரதான சாலை, தினசரி சந்தை சாலை, புதுரோடு ஆகிய பகுதிகளின் சாலையோரங்களில் கரும்பு, மஞ்சள் குலை, ஜவுளிகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது. டி.எஸ்.பி. ஜகநாதன் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

