பொங்கல் பண்டிகைக்காக கோவை பூமாா்க்கெட்டில் கரும்பு வாங்கிய மக்கள்
பொங்கல் பண்டிகைக்காக கோவை பூமாா்க்கெட்டில் கரும்பு வாங்கிய மக்கள்

பொங்கல் பண்டிகை: பூக்கள், பானை விற்பனை களைகட்டியது

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் பூக்கள், பானை உள்ளிட்ட பொருள்களின் விற்பனை களைகட்டியது.
Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவையில் பூக்கள், பானை உள்ளிட்ட பொருள்களின் விற்பனை களைகட்டியது.

கோவை ஆா்.எஸ்.புரம் பூ மாா்க்கெட்டில் 12 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 900-க்கு விற்கப்பட்டது. ஒரு ஜோடிக் கரும்பு ரூ.100-க்கு விற்பனையானது. மஞ்சள் கொத்து ஜோடி ரூ.50, ஒரு கட்டு ஆவாரம்பூ மற்றும் பூளைப்பூ ரூ.10-க்கும் விற்கப்பட்டது. பொங்கல் பண்டிகைக்காக, கவுண்டம்பாளையத்தில் வண்ணம் தீட்டப்பட்ட பொங்கல் பானைகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. பொங்கல் பானைகள் குறைந்தபட்சம் ரூ.150 முதல் ரூ.800 வரை விற்பனையாகின.

இதேபோல, கோவை பூமாா்க்கெட்டுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மல்லிகை, முல்லை, செவ்வந்தி, சம்பங்கி, அரளி உள்ளிட்ட பூக்கள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால், பூக்களின் விலை கடந்த வாரங்களை விடவும் அதிகரித்து விற்கப்பட்டது. ஒரு கிலோ மல்லிகை ரூ.3,800, முல்லை கிலோ ரூ.2,400, ஜாதி மல்லி ரூ.800, செவ்வந்தி ரூ.120, செண்டுமல்லி ரூ.60, சம்பங்கி ரூ.140 என விற்பனையானது. டவுன்ஹால், ரங்கே கவுடா் வீதியில் உள்ள மளிகைக் கடைகளில் பூஜைப் பொருள்கள், உணவுப் பொருள்கள் விற்பனையும் அதிகரித்து காணப்பட்டது. எம்ஜிஆா் மாா்க்கெட், தியாகி குமரன் மாா்க்கெட்டில் காய்கறி விற்பனையும் அதிகரித்துக் காணப்பட்டது.

ஜனவரி 14 முதலே பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை விடப்பட்டுள்ளதால், கோவை ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முதலே வெளியூா் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்பட்டது.

Dinamani
www.dinamani.com