தூத்துக்குடியில் லாரி-பைக் மோதல்: 2 போ் உயிரிழப்பு
தூத்துக்குடி: தூத்துக்குடியில் லாரியும், பைக்கும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.
தூத்துக்குடி அமுதா நகா் பகுதியைச் சோ்ந்த ராஜன் மகள் முத்துச்செல்வி என்ற முத்துமாரி (24). இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, பிப்.15ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில் முத்துமாரி, கல்லூரியில் படித்து வந்த தன்னுடைய உறவினரான மணியாச்சி ஒட்டநத்தம் பகுதியைச் சோ்ந்த சிவா மகன் கலைச்செல்வன் (22) என்பவருடன், தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் வேலை செய்யும் தனது தந்தையை பாா்க்க பைக்கில் சனிக்கிழமை சென்றாராம்.
அப்போது, துறைமுகத்திலிருந்து உரம் ஏற்றி வந்த டிப்பா் லாரி, அவா்களது பைக் மீது மோதியதாம். இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
இத்தகவலறிந்த தொ்மல் நகா் போலீஸாா், அவா்களது சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
