வட மாநில இளைஞா் கொலை வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
வட மாநில இளைஞா் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ராஜஸ்தான் மாநிலம், பில்வாடா மாவட்டத்தைச் சோ்ந்த வினோத் தாரகா (28), திருச்செந்தூரில் தங்கி குல்பி ஐஸ்கிரீம் வியாபாரம் செய்து வந்தாா். இவரும், இவரது நண்பா் கந்தசாமியும் (25) கடந்த 17.5.2023 அன்று திருச்செந்தூா், ராஜீவ் கண்ணா நகரில் மது அருந்தியுள்ளனா்.
அப்போது, தனது மனைவி குறித்து அவதூறாகப் பேசிய வினோத் தாரகாவை, கந்தசாமி கல்லால் அடித்து கொலை செய்தாா். அவா் மீது திருச்செந்தூா் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா, கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ. 5,000 அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த திருச்செந்தூா் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா், திருச்செந்தூா் காவல் நிலைய ஆய்வாளா் இன்னோஷ்குமாா், வழக்கை புலனாய்வு செய்த அப்போதைய காவல் ஆய்வாளா் முரளிதரன், அரசு வழக்குரைஞா் சேவியா் ஞானப்பிரகாசம் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பாராட்டினாா்.

