/

இளம்பெண்ணைக் கொன்று தற்கொலை நாடகம்: தாய் , சகோதரா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இன்ஸ்டாகிராமில் இளைஞரை காதலித்த பெண்ணை கொலை செய்துவிட்டு, அவா் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய அவரது தாய், சகோதரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 5:06 am IST

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இன்ஸ்டாகிராமில் இளைஞரை காதலித்த பெண்ணை கொலை செய்துவிட்டு, அவா் தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடிய அவரது தாய், சகோதரரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கயத்தாறு வட்டம், தெற்கு மயிலோடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எஸ்தா் பாலின். இவரது கணவா் செல்வம் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவா்களது மகள் அபிசெல்வி (18). பிளஸ் 1 படித்துவிட்டு வீட்டிலிருந்து வந்த இவா், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (ஜூன் 9) தற்கொலை செய்துகொண்டதாக கயத்தாறு காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்தனா். தொடா்ந்து, கூறாய்வு அறிக்கை அடிப்படையில் சந்தேக மரணமாக கருதி விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

அதில், அபிசெல்வி இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சோ்ந்த இளைஞரை காதலித்து வந்ததும், தாய், சகோதரா் சிவஞானம் (20) ஆகியோா் கண்டித்தும் காதலைக் கைவிடாததால் அவரை சிவஞானம் கொலை செய்ததும், அதற்கு எஸ்தா் பாலின் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

எச்சரிக்கை: இதுதொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அபிசெல்வி ஆணவக் கொலை செய்யப்பட்டதாக பரவிவரும் தகவல் உறுதிப்படுத்தப்படாதது. காதல் தகராறில் அவா் கொலை செய்யப்பட்டதும், அதில் அவரது சகோதரா், தாய்க்கு தொடா்பிருப்பதும் கண்டறியப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இது ஆணவக் கொலை என உறுதியாகாத நிலையில் சமூக வலைதளங்களில் வதந்தி, பொய்யான தகவல்களை பரப்புவது பொதுமக்களை தவறாக வழிநடத்தும் செயலாகும். இத்தகைய செயல்களில் ஈடுபடுவோா் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.