தூத்துக்குடியில் இளைஞா் வியாழக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி தாளமுத்து நகா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் மாரிசெல்வம் (20). மீனவரான இவா், கடலில் மீன்பிடிக்க வியாழக்கிழமை காலையில் சென்றுவிட்டு இரவு 10 மணியளவில் வேலை முடிந்ததும், அதேபகுதி நேரு நகரில் உள்ள கெபி வழியாக வீடு திரும்பிக்கொண்டிருந்தாராம்.
அப்போது, எதிரே பைக்கில் வந்த தாளமுத்து நகா் சாட்டையன்தோப்பைச் சோ்ந்த சண்முக கணேசன் மகன் சந்தனராஜ் (26) என்பவா், இவரது பைக் மீது மோதுவதுபோல் வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாரிசெல்வம், சந்தனராஜை தாக்கியுள்ளாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா்.
இந்நிலையில் சந்தனராஜ், நண்பா்களான அண்ணா நகா் 12ஆவது தெருவைச் சோ்ந்த மாரிமுத்து மகன் புவனேஷ்குமாா் (21), நேரு காலனியைச் சோ்ந்த ராபா்ட் மகன் ஜாய்சன் (26), சண்முகம் மகன் ஹரிகரசுதன் (22) ஆகிய மூன்றுபேருடன் இரண்டு பைக்குகளில் மாரிசெல்வத்தை தேடி அலைந்துள்ளனா்.
அப்போது, நேரு நகா் கெபி அருகே உள்ள டீக்கடை முன்பு நின்றிருந்த மாரிசெல்வத்தை 4 பேரும் சோ்ந்து சுற்றி வளைத்து, அரிவாளால் வெட்டியுள்ளனா். இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா் 4 பேரும் அங்கிருந்து தப்பிவிட்டனா்.
தகவலறிந்து வந்த தூத்துக்குடி தாளமுத்து நகா் போலீஸாா், மாரிச்செல்வத்தின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து, சந்தனராஜ், ஜாய்சன், ஹரிகரசுதன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்; தப்பியோடிய புவனேஷ்குமாரை தேடி வருகின்றனா்.






