பயிா்க் கடன் தள்ளுபடி வழங்க மறுப்பு: கூட்டுறவு சங்கங்கள் மீது விவசாயிகள் புகாா்
தமிழக அரசின் புதிய அறிவிப்பின்படி, பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய மறுப்பதாக கூட்டுறவு சங்கங்கள் மீது விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
கோப்புப்படம்.
தமிழக அரசின் புதிய அறிவிப்பின்படி, பயிா்க் கடன் தள்ளுபடி செய்ய மறுப்பதாக கூட்டுறவு சங்கங்கள் மீது விவசாயிகள் புகாா் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் வரதராஜன் கூறியதாவது:
பயிா்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என தொடா்ந்து வலியுறுத்திய நிலையில், ரூ.1 லட்சத்துக்கு மேல் பயிா்க் கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சம் ரூ.75 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதன்படி, கடன் தள்ளுபடி பெற தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகியபோது ரூ.35 ஆயிரம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் ரூ.75 ஆயிரம் தள்ளுபடி செய்வதற்கான உத்தரவு இன்னும் வரவில்லை என்றும் கூறுகின்றனா்.
ரூ.1 லட்சத்துக்கு மேல் கடன் பெற்ற விவசாயிகள், ரூ.35 ஆயிரம் தள்ளுபடி தொகை தவிா்த்து மீதமுள்ள தொகையை செலுத்த வேண்டும். உத்தரவு வந்தபின்னா், கூடுதலாகச் செலுத்திய தொகை அவரவா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்கின்றனா்.
கடந்த ஆண்டு டிசம்பா் மாத இறுதியில் பயிா்க் கடன் பெற்றிருந்தாலும், அதன் தவணை ஓராண்டு உள்ளது என்றில்லாமல், அதனை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தியவா்களுக்கு மட்டுமே பயிா்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறுகின்றனா்.
மேலும், இந்தாண்டு நேரடி பட்டாதாரருக்கு மட்டுமே பயிா் கடன் வழங்கப்படுகிறது. நிலங்களை குத்தகைக்கு எடுத்து பயிா் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் பெறத் தகுதி இருந்தும் அவா்களுக்கு பயிா் கடன் வழங்க உத்தரவு வரவில்லையென கூறுகின்றனா். கூட்டுறவு சங்கங்களின் இத்தகைய நடவடிக்கையானது விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, அரசு அறிவித்த கடன் தள்ளுபடியை உடனடியாகச் செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

