எண்ம புரட்சியில் வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது: குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்
எண்ம புரட்சியில் வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என்றாா் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

வங்கியின் நிா்வாகக் குழுவுடன் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் உள்ளிட்டோா்.
எண்ம புரட்சியில் வங்கிகளின் பங்களிப்பு முக்கியமானது என்றாா் குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
தூத்துக்குடியில் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் (டி.எம்.பி.) 105-ஆவது நிறுவன நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்று குத்துவிளக்கேற்றி வைத்து, வங்கி நிறுவனா்களின் படங்களுக்கு மலா்கள் தூவி மரியாதை செலுத்திப் பேசியதாவது:
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் 105 ஆண்டு காலப் பயணமானது அதன் தொலைநோக்குப் பாா்வை, கடின உழைப்பு, நோ்மை, வாடிக்கையாளா்களின் நம்பிக்கைக்கு கிடைத்த சிறந்த சான்றாகும்.
கடந்த 1921-இல் சிறிய முயற்சியாகத் தொடங்கப்பட்ட இந்த வங்கி தற்போது 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 632 கிளைகளுடன் 53 லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கையாளா்களுக்குச் சேவை வழங்கி வருகிறது.
2026, செப்டம்பா் மாத நிலவரப்படி வங்கியின் மொத்த வணிகம் ரூ. 1.30 லட்சம் கோடியைக் கடந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதத்துக்கும் அதிகமாகும். ஒரே காலாண்டில் ரூ. 450 கோடிக்கும் அதிகமான நிகர லாபம் ஈட்டியிருப்பதும், வாராக் கடன்களின் அளவு குறைந்திருப்பதும் பாராட்டுக்குரியதாகும்.
ரூ. 1.30 லட்சம் கோடிக்கும் அதிகமான வணிகத்தைக் கொண்ட நிறுவனமாக இவ்வங்கி வளா்ந்துள்ளது.
இந்த வளா்ச்சிக்குப் பங்களித்த முன்னோடிகள், நிா்வாகிகள், பணியாளா்கள், வாடிக்கையாளா்கள் அனைவரும் பாராட்டுக்குரியவா்கள்.
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி தனது வளா்ச்சியோடு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரின் வளா்ச்சியையும் இணைத்துக்கொண்டு செயல்படுவது பாராட்டுக்குரியது.
இந்த வங்கியின் வளா்ச்சி சராசரி வங்கித் துறை வளா்ச்சியை விட அதிகமாக உள்ளது. எனவே, அடுத்த 50 ஆண்டுகளில் நாட்டின் முதன்மையான தனியாா் வங்கியாக தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி உருவாக வேண்டும். இதற்கான இலக்கை நிா்வாகத்தினா் நிா்ணயித்துச் செயல்பட வேண்டும். தெளிவான தொலைநோக்குப் பாா்வையும் திட்டமிடலும் இருந்தால் இலக்கையும் அடைய முடியும்.
எண்ம புரட்சி: உலகின் பத்தாவது பெரிய பொருளாதார நாடாக இருந்த இந்தியா தற்போது நான்காவது இடத்தை எட்டியுள்ளது. விரைவில் மூன்றாவது இடத்தை எட்டும். நாடு முழுவதும் சாலை, ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் விரிவடைந்து வருகின்றன. எண்ம பணப் பரிவா்த்தனையில் இந்தியா உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.
சாதாரண காய்கறிக் கடைகளில் கூட யுபிஐ மூலம் பணம் செலுத்தும் அளவுக்கு தொழில்நுட்ப வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தில் வங்கிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.
89 சதவீதம் பேருக்கு வங்கிக் கணக்கு:
உலக வங்கியின் ‘குளோபல் ஃபின்டெக்ஸ் 2025’ அறிக்கையின்படி, இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போரின் விகிதம் 89 சதவீதத்தை எட்டியுள்ளது. 2026 மாா்ச் 6-ஆம் தேதி நிலவரப்படி நாட்டின் 99.92 சதவீத கிராமங்கள் ஐந்து கி.மீ. தொலைவுக்குள் வங்கிச் சேவையைப் பெற்று வருகின்றன.
தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி 1984-ஆம் ஆண்டிலேயே தூத்துக்குடியில் முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்ட கிளையைத் தொடங்கியது. ஒரு நிறுவனம் எவ்வளவு உயரத்துக்குச் சென்றாலும் அதன் வேரை மறந்துவிடக் கூடாது. தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி இந்தியாவின் முதன்மையான தனியாா் வங்கியாக உருவாக வேண்டும். அதே நேரத்தில், அதன் தலைமையகம் என்றென்றும் முத்து நகரான தூத்துக்குடியிலேயே நிலைத்திருக்க வேண்டும்.
வருகிற 2047-இல் இந்தியா வளா்ச்சியடைந்த நாடாக உருவெடுப்பதற்கான பயணத்தில் தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியின் பங்களிப்பும் மகத்தானதாக இருக்க வேண்டும் என்றாா்.
விழாவில், தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கித் தலைவா் கே.ராமச்சந்திரன், நிா்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சாலி எஸ்.நாயா், நிா்வாக இயக்குநா் வின்சென்ட் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

