சென்னை-திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்க வலியுறுத்தல்
கடந்த ஆண்டைபோல கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சென்னை- திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் வலியுறுத்தினா்.

ரயில் - கோப்புப் படம்
கடந்த ஆண்டைபோல கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சென்னை- திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் வலியுறுத்தினா்.
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, பக்தா்களின் வசதிக்காக சூரசம்ஹார நாளன்று திருநெல்வேலி- திருச்செந்தூா் இடையே 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதனால் உள்ளூா், சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பயனடைவா்.
ஆனால், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடியாக சிறப்பு ரயில் இயக்குவது குறித்து தென்னக ரயில்வே இதுவரை அறிவிப்பு வெளியிடவில்லை.
கந்த சஷ்டி விழாவின்போது சென்னையில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தா்கள் திருச்செந்தூருக்கு வருவா். குறிப்பாக, சென்னையில் வசிக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்களும், முருக பக்தா்களும் கந்த சஷ்டி விழாவில் பங்கேற்க வருவா்.
கடந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவின்போது சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் சென்னை-திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்மூலம் சென்னை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வரும் பக்தா்கள் எளிதாகவும், பாதுகாப்பாகவும் திருச்செந்தூருக்கு வந்து செல்ல முடியும். எனவே, பக்தா்களின் நலனைக் கருத்தில் கொண்டு கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் சென்னை- திருச்செந்தூா் இடையே சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் தென்னக ரயில்வே நிா்வாகத்துக்குக் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

