தைல மரச் சாகுபடிக்காக முந்திரிக் காடுகள் அழிப்பு?
ஆலங்குடி, ஆக. 25: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் தைல மரச் சாகுபடிக்காக முந்திரிக் காடுகளை அழிக்கும் பணியில் வனத் துறையினர் இறங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே, வறட்சியா


ஆலங்குடி, ஆக. 25: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் தைல மரச் சாகுபடிக்காக முந்திரிக் காடுகளை அழிக்கும் பணியில் வனத் துறையினர் இறங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஏற்கெனவே, வறட்சியான இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை மேலும் மோசமாக்கக்கூடிய தைல மரச் சாகுபடியை வனத் துறையினர் நிறுத்த வேண்டும் என்றும் விவசாயிகளிடமிருந்து குரல் எழுந்துள்ளது.
தோட்டக்கலைத் துறையினர் கணக்கின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவரங்குளம், கந்தர்வகோட்டை, சேந்தன்குடி, ராசியமங்கலம், அறந்தாங்கி உள்ளிட்ட பகுதிகளில் வனத் துறையின் கட்டுப்பாட்டில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர்; தனியாரின் நிர்வாகத்தில் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் முந்திரிக் காடு உள்ளது.
வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் விளையும் முந்திரிப் பழம் மற்றும் கொட்டைகளை விற்பதன் மூலம் அரசுக்கு பல லட்ச ரூபாய் வருமானம் கிடைத்து வந்தது.
இந்நிலையில், வெளிநாடுகளிலிருந்து முந்திரியைக் கொள்முதல் செய்வதால், உள்நாட்டு முந்திரிக்கு உரிய விலை கிடைக்காத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து, முந்திரி உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் வகையில், இப்பகுதியில் அரசு முந்திரித் தொழில்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை பலனில்லை.
இந்நிலையில், இங்கு முந்திரிக் காடுகளை அழித்துவிட்டு - முந்திரிச் சாகுபடிக்கு மாற்றாக தைல மரச் சாகுபடி மேற்கொள்ள வனத் துறை திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
ஆலங்குடி அருகேயுள்ள கே. ராசிமங்கலம் பகுதியில் வனத் துறை கட்டுப்பாட்டிலுள்ள 411 ஏக்கர் பரப்பிலான முந்திரிக் காட்டில், சுமார் 60 ஏக்கரில் உள்ள முந்திரி மரங்களை வெட்டி அகற்ற தனியாருடன் ஒப்பந்தமிடப்பட்டு, மரம் வெட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது இப்பகுதி மக்களிடையே - குறிப்பாக, விவசாயிகளிடையே கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இயல்பாகவே புதுக்கோட்டை மாவட்டம் வறட்சியான மாவட்டம். அதிலும் ஆலங்குடி பகுதியில் நீராதாரம் மிகக் குறைவு. உரிய ஆற்றுப் பாசனம் இல்லாத நிலையில், ஆழ்குழாய்க் கிணறுகள் மூலமாகவும் மழையை நம்பியுமே இங்கு விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், வனத் துறை இங்கு தைல மரச் சாகுபடி மேற்கொண்டால், நிலத்தடி நீர்மட்டம் மேலும் மோசமாகும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் தைல மரச் சாகுபடி அதிகம். இதன் விளைவாகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டுவோரும் உண்டு.
இத்தகைய சூழலில், மேலும் இந்த மாவட்டத்தை தைல மரக் காடாக்கினால் முற்றிலுமாக விவசாயம் பாதிக்கப்படுவதுடன் மாவட்டமே பாலைவனமாகிவிடும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி ஆலங்குடி தங்கராஜ் கூறியது:
""மாவட்டத்தில் ராசியமங்கலம் பகுதியில்தான் அதிக அளவில் வாழை, சோளம் உள்ளிட்ட பயிர் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தைல மரச் சாகுபடி இங்கு மேற்கொள்ளப்பட்டால், இப்பகுதியில் விவசாயம் முற்றிலும் அழியும் சூழல் உருவாகும்'' என்றார் தங்கராஜ்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது:
""காலம் கடந்த முந்திரி மரங்களை மட்டுமே அழிப்பதாகக் கூறி தற்போது அந்தக் காடுகளையே அழிக்கும் திட்டத்தை வனத் துறையினர் தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே, இந்த மாவட்டத்தில் தைல மரச் சாகுபடியைத் தடை செய்ய வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை வலியுறுத்தியுள்ளோம். எனினும், நடவடிக்கை இல்லை. இப்போதேனும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...