பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்கப்படுமா?
பேராவூரணி, ஆக. 5: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் எப்போது அமைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 1975 ஆம் ஆண்டிலிருந்


பேராவூரணி, ஆக. 5: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள் எப்போது அமைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
1975 ஆம் ஆண்டிலிருந்து பேராவூரணி தனி வட்டமாக செயல்பட்டு வருகிறது. இதைச்சுற்றிலும் 500-க்கும் மேல்பட்ட சிறு கிராமங்கள் உள்ளன. சுமார் 3 லட்சத்திற்கும் மேல்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.
இந்த நிலையில், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த மக்கள் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்காக பட்டுக்கோட்டைக்கு செல்லும் நிலை நீண்ட நாள்களாக உள்ளது.
பேராவூரணி தொகுதியின் கடைக்கோடியிலுள்ள ஒருவர் வழக்கிற்காக பட்டுக்கோட்டைக்கு 70 கிமீ தொலைவிற்கு பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளதால், கால விரயமும், வீண் செலவும் ஏற்படுகிறது. மேலும், பேராவூரணி பகுதி மக்களின் 3 ஆயிரத்திற்கும் மேல்பட்ட வழக்குகள் பட்டுக்கோட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. சொத்து பிரச்னை வழக்குகளில் உரிய நேரத்தில் நியாயம் கிடைக்காததால், விவசாயிகள் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த 25 ஆண்டுகளாக பேராவூரணியில் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட நிலையில், கடந்த 1998-ல் நீதிமன்றம் அமைவதற்கான கட்டடத்தை தேர்வு செய்து அறிக்கை அனுப்ப, உயர் நீதிமன்றப் பதிவாளர் உத்தரவிட்டார். அதன்படி, பேராவூரணிக்கு வந்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி, நீதிமன்றத்திற்கான வாடகைக் கட்டடத்தைப் பார்வையிட்டு, அறிக்கை அனுப்பியும் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில், நீதிமன்றத்திற்கான சொந்த இடத்திற்காக வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்டும் உள்ளது. பேராவூரணி தொகுதியில் பேராவூரணி, திருச்சிற்றம்பலம், சேதுபாவாசத்திரம், வாட்டாத்திக்கோட்டை ஆகிய காவல் நிலையங்கள் இருந்தும், நீதிமன்றம் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை. பேராவூரணி தொகுதியை அடுத்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி, ஆலங்குடி ஆகிய தொகுதிகளில் பல ஆண்டுகளாக நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.
கடந்த 1989-ல் திமுக ஆட்சியில் வட்டத்திற்கு ஒரு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என அரசாணை வெளியிடப்பட்டது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறாத நிலையில், பேராவூரணி பகுதி வழக்குரைஞர்கள் சங்கம் ஏற்படுத்தப்பட்டு நீதிமன்றம் அமைப்பதற்கான தீவிர முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக சட்டத் துறை அமைச்சர், மத்திய நிதித் துறை இணை அமைச்சர் ஆகியோரிடம் நேரடியாக வலியுறுத்திய நிலையிலும், நீதிமன்றம் அமைக்கப்படாமல் பேராவூரணி புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
பேராவூரணி தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவைச் சேர்ந்தவர் இருப்பதால், நீதிமன்றம் அமைக்கும் பணியை அரசு காலம் தாழ்த்துவதாக பொதுமக்களிடையே கருத்து நிலவுகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் நீதிமன்றம் அமைப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும் என்பதே இந்தப் பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...