குடிநீருக்காக அவதிப்படும் அரசு ஊழியர்கள்!

அரியலூர், டிச. 22: அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் அமைந்துள்ள பல்துறை அலுவலகக் கட்டடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இருந்தும் பயனி
Updated on
2 min read

அரியலூர், டிச. 22: அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் அமைந்துள்ள பல்துறை அலுவலகக் கட்டடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் இருந்தும் பயனில்லாததால், குடிநீருக்காக அரசு ஊழியர்கள் பெரும் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

   அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட பின்னர், ஆட்சியரகம் உள்ளிட்ட பல்துறை அலுவலகங்களுக்காக கட்டடம் கட்ட அரியலூர் - ஜயங்கொண்டம் சாலையில் உழவர் சந்தை அருகில் 2004, டிசம்பர் 14 ஆம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது.

  இதைத் தொடர்ந்து, பணிகள் விரைவாக முடிக்கப்பட்ட பின்னர் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் பல்துறை அலுவலகக் கட்டடம் திறக்கப்பட்டது.

   இந்தக் கட்டடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அலுவலகம், மாவட்டக் கருவூலம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், தேசிய தகவல் மையம், புள்ளியியல் உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது, கணக்கு அலுவலகங்கள், ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகம், தோட்டக்கலை  துணை இயக்குநர் அலுவலகம், தேர்தல் பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

  அரசு அலுவலக ஊழியர்களின் வசதிக்காக தரைத்தளத்தில் ஊராட்சிகள் உதவி  இயக்குநர் அலுவலகத்துக்கு அருகிலும், முதல் தளத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) அலுவலகத்துக்கு அருகிலும், இரண்டாம் தளத்தில் தேசிய தகவல் மைய அலுவலகத்துக்கு அருகிலும் அந்தந்த தளங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள், ஊழியர்களின் பயன்பாட்டுக்காக குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகள் கொண்ட இயந்திரங்கள் பொருத்தப்பட்டன.

  இந்த இயந்திரங்களிலிருந்து குடிநீரை அந்தந்தத் தளங்களில் உள்ள அலுவலகங்களில் ஊழியர்கள் பயன்படுத்திக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் எதுவும் செயல்படவில்லையாம்.

   பல்துறை அலுவலகக் கட்டடத்தில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் பெண் ஊழியர்கள் பலர் வீட்டிலிருந்து பாட்டில்களில் கொண்டு வந்துவிட்டாலும், எஞ்சிய ஊழியர்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் பெரும் அவதிப்பட்டுக்  கொண்டிருக்கின்றனர்.

   குறிப்பாக, மதிய உணவு சாப்பிடும் போது குடிநீர் பிடிப்பதற்காக வெளியே சென்று குடிநீர் வாங்கி வர வேண்டியுள்ளது. மேலும், ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் குடிநீர் வசதி இல்லாததால், பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.

  பல்துறை அலுவலகக் கட்டடத்தில் குடிநீர் பிரச்னையை தீர்ப்பதற்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து அலுவலக ஊழியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

  பல்துறை அலுவலக வளாகத்தில் சுற்றித் திரியும் பன்றிகள்:

  இந்தக் கட்டடத்தின் நுழைவு வாயிலில் காவலர் அறை கட்டப்பட்டும் பகல்  நேரங்களில் யாரும் அங்கு இருப்பதாகத் தெரியவில்லை. இதனால், கால்நடைகள் முதல் பன்றிகள் வரை அனைத்தும் வளாகத்தில் சுற்றித் திரிகின்றன.

  மேலும், பல்துறை அலுவலக வளாகக் கட்டடத்தை சுற்றி புல், பூண்டுகள் அதிகளவில் இருப்பதால், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகளின் நடமாட்டமும் இருப்பதாக  அரசு ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

  பல்துறை அலுவலகக் கட்டடம் அமைந்துள்ள பகுதியின் பின்புறத்தை காலை, இரவு நேரங்களில் குறிப்பிட்ட சிலர் பொதுக் கழிப்பிடமாகவே பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பல்துறை அலுவலகக் கட்டடத்துக்குள் பன்றிகள் நுழைந்து சுற்றித் திரிகின்றன.   எனவே, அலுவலக நுழைவு வாயிலில் காவலர் அறையில் பகல் நேரத்தில் உரிய  பணியாளர்களை நியமிக்க வேண்டும். வளாகத்தைச் சுற்றி இருக்கும் புல், பூண்டுகளை  அகற்றி, ஊழியர்கள் அச்சமின்றி பணியாற்ற மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து ஊழியர்களும் எதிர்பார்க்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com