/

அதிவேகமாகச் செல்லும் மணல் லாரிகள் அச்சத்தில் துறையூர் மக்கள்

துறையூர், டிச. 30:  திருச்சி மாவட்டம்,  துறையூர் நகரில் அதிவேகமாகச் செல்லும் மணல் லாரிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.     கடந்த 22-ம் தேதி துறையூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சேகர், துறையூர் பிர

News image
Updated On :27 டிசம்பர் 2023, 6:45 pm

என். கணேஷ்சங்கர்

துறையூர், டிச. 30:  திருச்சி மாவட்டம்,  துறையூர் நகரில் அதிவேகமாகச் செல்லும் மணல் லாரிகளால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

    கடந்த 22-ம் தேதி துறையூர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் சேகர், துறையூர் பிரிவு சாலையில் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, உழவர் சந்தை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    போலீஸôர் விசாரணையில் அதிவேகமாகச் சென்ற அடையாளம் தெரியாத மணல் லாரி, அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது தெரிய வந்தது.

     ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மற்ற இடங்களைக் காட்டிலும் துறையூர் பகுதியில் சாலைகள் சற்றுக் குறுகலாக உள்ளன. இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளில் இயக்குவதைப் போல இந்தச் சாலைகளிலும் அதிவேகமாக லாரிகளை செலுத்துவதால்தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்கின்றனர் இந்தப் பகுதி பொதுமக்கள்.

     மேலும், புறவழிச் சாலை அமைப்பதில் நிலவும் தாமதத்தால்தான், மணல் லாரிகள் நகருக்குள் வருகின்றன. எனவே, புறவழிச் சாலை அமைக்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்கின்றனர் அவர்கள்.

    இதுதொடர்பாக அந்தப் பகுதி மக்கள் மேலும் கூறியது:

    துறையூர் பகுதியில் அண்மைக்காலமாக வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 100-க்கும் அதிகமான மணல் லாரிகள் சென்று வருகின்றன. ஆனால், இந்த லாரிகள் போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காமல் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. இதனால், அடிக்கடி உயிரிழப்புகள் நேரிடுகின்றன.

    முசிறியிலிருந்து மணல் அள்ளி வரும் இந்த லாரிகள் முறையாக அனுமதியை பெற்றுள்ளனவா? போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுகின்றனவா? சாலையின் தன்மைக்கேற்ப இயக்கப்படுகின்றனவா? என்று வருவாய், போக்குவரத்து, காவல் துறையினர் சோதனை நடத்துவதாகத் தெரியவில்லை.

    ஏனெனில், இந்த லாரிகளில் பெரும்பாலானவை வட மாவட்டங்களைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்களுக்குச் சொந்தமானவை என்றும், எனவேதான், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் கூறப்படுகிறது.

    இதனிடையே, மணல் லாரிகளால் துறையூரில் சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்றதாக மாறிவிட்டன. இதன் காரணமாகவும் இரு சக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.

    இந்த நிலையில், கடந்த சில நாள்களாக துறையூர் நகருக்குள் நுழையும் மணல் லாரிகள், பேருந்து நிலையம் வழியாக பிரதான சாலையில் இயக்கப்படாமல் இங்குள்ள தீயணைப்பு நிலையத்துக்குத் தெற்கேயுள்ள ஜமீன்தார் பள்ளி, விநாயகர் தெரு, சொரத்தூர் சாலை வழியாக பெருமாள் மலை அடிவாரத்தில் உள்ள பெரம்பலூர் சாலையை அடையும் வகையில் மாற்றி விடப்படுகின்றன.

    ஆனால், இந்த நடவடிக்கை மட்டும் போதாது. இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மணல் லாரிகளை சம்பந்தப்பட்ட துறையினர் அடிக்கடி சோதனை நடத்த வேண்டும். புறவழிச் சாலை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்கின்றனர் இந்தப் பகுதி மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.