நலிவடைந்து வரும் பாய் முடைதல் தொழில்
ஆலங்குடி, ஜன. 25: விலைவாசி உயர்வு, உற்பத்தி பொருள்களுக்கான விலை குறைவினால் பாரம்பரியமிக்க பாய் முடையும் தொழில் நலிவடைந்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்குடி ஒன்றியத்தில்


ஆலங்குடி, ஜன. 25: விலைவாசி உயர்வு, உற்பத்தி பொருள்களுக்கான விலை குறைவினால் பாரம்பரியமிக்க பாய் முடையும் தொழில் நலிவடைந்து வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ளது தீத்தான்விடுதி கிராமம். இங்கு அன்றாடத் தேவைக்கே திண்டாடும் நிலையில் இருந்த இப்பகுதி மக்கள், தங்களது
தேவைகளை ஓரளவு நிறைவு செய்துகொள்வதற்கு, 1953- ம் ஆண்டிலிருந்து குடும்பத்தோடு பாய் முடையும் தொழிலை பிரதானமாக செய்து வருகின்றனர்.
அதற்காக, அப்பகுதியில் செல்லும் ஆற்றில் வளர்ந்துள்ள கோரைகளைக் கொண்டு வந்து அதைப் பக்குவப்படுத்தி, தேவைக்கு ஏற்றவாறு சாயமேற்றி பாய் முடைவதற்கு பயன்படுத்தினர்.
பாய் முடைவதற்கு கோரையுடன் தேவைப்படும் நாருக்கு ஆலங்குடி வட்டாரத்தில் பெரும்பாலான பகுதி காடாக இருந்ததால், அப்பகுதியில் எளிதாகக் கிடைத்த கற்றாழைகளில் இருந்து நார் திரித்து இயந்திரம் இன்றி பாய்களை முடைந்தனர்.
இந்தக் கிராம மக்கள் இந்தத் தொழிலையே தொடர்ந்து செய்து புதுக்கோட்டை மட்டுமன்றி பிற மாவட்டங்களுக்கும் எடுத்துச் சென்று விற்பனை செய்தனர்.
மேலும், பிற பகுதிகளுக்கு இந்தப் பாய்களை அனுப்பியதால், கறம்பக்குடி பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு அனுப்பப்படும் பொருளாக பாய் மட்டுமே திகழ்ந்தது.
இதையடுத்து, அரசு முன்வந்து இங்கு 1956-ம் ஆண்டு கதர் வாரியத்தால் தொடங்கப்பட்ட பாய் கூட்டுறவு மையம் மூலம் அந்தக் கிராமத்தில் முடையப்படும் பாய்களைக் கொள்முதல் செய்து, அரசின் ஆதரவற்ற இல்லங்கள், மருத்துவமனைகள், விடுதிகள் எனப் பல்வேறு துறைகளுக்குப் பயன்படுத்தினர்.
புதுகை மாவட்டத்துக்கு வருகை தரும் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்கள்,
கட்சியின் தலைவர்களுக்கு இங்கு முடையப்படும் பாயில் அவர்களது பெயரை முடைந்து
பரிசாகவும் கொடுத்துள்ளனர்.
மேலும், திருமண விழாக்களுக்கு மணமக்களின் பெயரை முடைந்து விற்பனை செய்துள்ளனர். இதில் கிடைக்கும் வருமானத்தைவிட இந்தத் தொழிலை பெரும் கலையாகவும் கருதினர்.
இந்நிலையில், சமீபகாலமாக உயர்ந்து வரும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால், பாய் முடைதல் தொழிலை விட்டு விட்டு விவசாயம், கூலி வேலைகளைச் செய்து வருகின்றனர். தற்போது ஒருசிலர் மட்டுமே
பாய் முடைதல் தொழிலைச் செய்து வருகின்றனர்.
இதனால், சுமார் 10 ஆண்டுகளாக கூட்டுறவு மையம் செயல்படாமல் உள்ளது.
இதுகுறித்து பாய் முடையும் தொழிலாளி ஆ. சின்னப்பா கூறியது:
நாள் ஒன்றுக்கு மூன்று பாய்கள் மட்டுமே முடைய முடியும். ஒரு பாயின் விலை ரூ.50 என விற்கப்படுகிறது. மேலும், விவசாய வேலைக்குச் சென்றால் குறைந்த நேரத்தில் அதிகமான தொகை கிடைத்துவிடும். கோரை, கற்றாழை நார் கிடைப்பதில்லை என்பதால் பாய்
தொழில் நலிவடைந்துவிட்டது. எனக்கு வேறு வேலை தெரியாததால், இந்தத் தொழிலை செய்து வருகிறேன் என்றார் அவர்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் ரெ. வள்ளியம்மை கூறியது:
வேலைவாய்ப்பு குறைவாக இருப்பதால், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் அதிகமாக வேலை கொடுத்து வருகிறோம்.
அரசு இப்பகுதி மக்களுக்கு கோரை விவசாயம் மேற்கொள்ளும் வசதிகளுடன் இயந்திரங்களை வழங்கினால், சுமார் 10 பேருக்கு மேல் வேலைவாய்ப்பு அளிக்கப்படும். அதன்மூலம் நாளொன்றுக்கு 100 பாய் முடையப்படும். இதன்மூலம் பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள ஏதுவாக அமையும் என்றார் அவர்.
எனவே, நலிவடைந்து வரும் பாய்முடைதல் தொழிலை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...