/

விளம்பரப் பதாகைகள் அகற்றப்படுமா?

ஆலங்குடி, ஜூலை 2: சாலையோர மரங்களைச் சேதப்படுத்தும் வகையில், மரத்தில் ஆணி அடித்து பிணைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றுவதோடு, இத்தகைய விளம்பரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:09 am

கே. சுரேஷ்குமார்

ஆலங்குடி, ஜூலை 2: சாலையோர மரங்களைச் சேதப்படுத்தும் வகையில், மரத்தில் ஆணி அடித்து பிணைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்றுவதோடு, இத்தகைய விளம்பரங்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  மரங்களின் முக்கியத்துவத்தை விளக்க விளக்கங்கள் தேவையில்லை. ஆனால், மனித இனத்துக்கு எவ்வளவு பயன்களைத் தந்தாலும் மரங்கள் மனிதனால் ஆபத்துகளையே சந்திக்கின்றன.

  வானகப் பெருக்கத்தை எதிர்கொள்ளவும் சாலைகளில் காற்று மாசைத் தடுக்கவும் ஓர் ஆண்டுக்கு 41,843 கி.மீ. என்ற வீதத்தில் ஓடும் ஒரு வாகனம் வெளிப்படுத்தும் கரியமில வாயுவை எதிர்கொள்ள ஓர் ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள மரங்கள் தேவைப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், பெருகிவரும் நவீன சாலைகளால் சாலையோர மரங்கள் ஒருபுறம் அப்படியே அழிக்கப்பட, மறுபுறம் எஞ்சியுள்ள மரங்களும் பல்வேறு சோதனைகளை எதிர்கொள்கின்றன.

   சாலையோர மரங்களில் ஆணிகளால் பிணைக்கப்பட்ட பிளாஸ்டிக் விளம்பரப் பதாகைகளும் இந்தச் சோதனைகளில் ஒன்றாக மாறியிருக்கிறது.

   இவ்வகை விளம்பர உத்தி பல்லாண்டு காலமாக தொடர்வதுதான் என்றாலும், அண்மைக் காலமாக புற்றீசல்போல் பெருகிவரும் தனியார் கல்வி நிறுவனங்கள் இவ்வகை விளம்பரத்தை அதிக அளவில் செய்துவருகின்றன.

இதனால்,விளம்பரப் பதாகைகள் அற்ற சாலையோர மரங்கள் அரிது என்று சொல்லக்கூடிய அளவுக்கு இப்போது நிலைமை மாறிவிட்டது.

   இப்படி விளம்பரப் பதாகைகளுடன் அடிக்கப்படும் ஆணிகள் மரத்தினுள் ஆழப் பதிந்து, மரத்தின் உள்பாகங்களைச் சிதைப்பதுடன் மரத்தின் வளர்ச்சியையும் பாதிக்கின்றன என்கின்றனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.

  இதுகுறித்து ஜெ.ஜெ. கல்லூரியின் தாவரவியல் துறைப் பேராசிரியர் எஸ். பழனியப்பன் கூறியது:

   ""மரங்கள் வயதாகும்போது உணவுப் பொருள்களைப் பரிமாற்றிக்கொள்ளும் திசுக்கள் மையப் பகுதியில் இருந்து புறத்தோலை ஒட்டினார்போல் வரும்.

மையப் பகுதிகள் கடினமான மரமாக மாறும். இதில் நீளமான இரும்பினாலான ஆணிகளைக்கொண்டு அடிக்கும்போது மரத்தின் உள் பகுதியில் திசுக்கள் காயமடைகின்றன.

இதனால், மரத்தின் உணவுப்பொருள் பரிமாற்றம் பாதிக்கப்படுவதுடன் மரத்தின் வலுவும் குறைந்துவிடுகிறது'' என்றார் அவர்.

  இதுகுறித்து மரம் வளர்ப்போர் சங்க மாவட்டச் செயலர் "மரம்' தங்கசாமி கூறியது:

   ""சாலையோர மரங்களைச் சேதப்படுத்தும் இவ்வகை விளம்பரப்  பதாகைகளை அகற்ற வேண்டும். தவிர, இத்தகைய விளம்பரங்களுக்குத் தடை விதிக்கவும் வேண்டும். மீறி செயல்படுவோர் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும்'' என்றார் அவர்.

  சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்களின் எதிர்பார்ப்பும் இதுதான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.