சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமிக்கு புதுகையில் சிலை அமைக்கப்படுமா?

புதுக்கோட்டை, ஜூன் 16: இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டிக்கு, அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் உருவச் சிலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். புதுமைப் பெண்களை உர

News image
Updated On :27 டிசம்பர் 2023, 4:19 pm

ஆா்.மோகன்ராம்

புதுக்கோட்டை, ஜூன் 16: இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான முத்துலட்சுமி ரெட்டிக்கு, அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் உருவச் சிலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

புதுமைப் பெண்களை உருவாக்கும் புரட்சிப் பணியில் ஈடுபட்ட மாதர் குல மாணிக்கங்கள் தமிழகத்தில் மிகச் சிலரே. அந்த மிகச் சிலரில் தலையாய இடம் பெறும் தகுதி பெற்றவர் ஒருவர் உண்டென்றால், அவர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்றால் மிகையல்ல.

பலருக்கும் சிலை அமைக்கப்பட்டுள்ள புதுக்கோட்டையில் சாதனைப் பெண்மணிக்கு சிலை இல்லை என்பது சமூக ஆர்வலர்களையும், மகளிரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த 30.7.1886 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானத்தில் கல்வித் துறை அதிகாரியாக இருந்த நாராயணசாமி- சந்திரம்மாள் தம்பதிக்கு மூத்த மகளாகப் பிறந்தார் முத்துலட்சுமி. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற பழைய பஞ்சாங்கம் கோலோட்சிய அந்தக் காலக் கட்டத்தில், எதிர் நீச்சல் போட்டு 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை ஊக்கமளித்தார். ஆனால், வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை. உள்ளூர் கல்லூரியிலோ பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

அதில் வெற்றி பெற்ற பிறகு, சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912-ல் நாட்டின் முதல் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.

இதைத் தொடர்ந்து, அப்போதைய சென்னை மாகாண முதல்வராக இருந்த சுப்பராயலு ரெட்டியின் சகோதரி மகனான மருத்துவர் சுந்தரரெட்டியை 1914 -ல் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, மருத்துவத் தம்பதியர் புதுக்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் 3 ஆண்டுகள் பணியாற்றினர்.

தொடர்ந்து விடுதலைப் போராட்டத்திலும், மகளிர் உரிமைக்கான இயக்கங்களிலும் முத்துலட்சுமி ரெட்டி ஈடுபாடு கொண்டார். டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார் இவருக்கு உறுதுணையாக நின்றார்.

1929-ல் இந்திய மாதர் சங்கம் பெண்களுக்கு சட்டப்பேரவையில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் எனப் போராடியதன் விளைவாக, முத்துலட்சுமி ரெட்டி சென்னை சட்டப்பேரவையின் உறுப்பினரானார்.

துணைத் தலைவராகவும் ஆனார். சட்டப்பேரவையில் நுழைந்த முதல் பெண்மணியும், உலகிலேயே சட்டப்பேரவையின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணியும் இவர்தான்.

சமுதாயத்தில் ஓர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டும் கோயில்களில் தேவதாசிகள் என்ற பெயரில் இழிவுபடுத்தப்படுவதைத் தடை செய்யும் சட்டத்தை பெரும் எதிர்ப்புகளுக்கிடையே நிறைவேற்றினார். பால்ய விவாக தடைச் சட்டம், பாலியல் தொழில் தடைச் சட்டம் கொண்டுவர இவர் பெரும் முயற்சி எடுத்தார்.

தொடர்ந்து, ஆதரவற்ற குழந்தைகள், பெண்களுக்காக சென்னையில் 1930-ல் ஒüவை இல்லத்தை நிறுவினார். புற்று நோய் கொடுமையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் 1936-ல் மாபெரும் இயக்கத்தை நடத்தி, இதற்கென தனி மருத்துவமனையை அமைக்க வேண்டும் என முயன்று, சென்னை அடையாறில் 1954-ல் புற்று நோய் மருத்துவமனையைத் தொடங்கினார்.

இன்று ஆசியாவிலேயே புகழ்மிக்க புற்றுநோய் மருத்துவமனயாக அது திகழ்கிறது. ஒüவை இல்லமும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மனித இனத்துக்கு விட்டுச் சென்ற மிகப்பெரிய சொத்து.

இத்தனைச் சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிந்தனை, மூச்சு, செயல் அனைத்தையும் பெண்கள் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்து வாழ்ந்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு, அவர் பிறந்த ஊரான புதுக்கோட்டையில் அவருக்கு உருவச் சிலை இல்லாதது பெருங்குறையாகவே உள்ளது.

சங்க கால புரட்சிப் பெண் கண்ணகிக்கு சிலை எடுத்த தமிழக முதல்வர், நவீன காலத்தில் பாரதி கண்ட புதுமைப் பெண் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு புதுக்கோட்டையில் சிலை அமைத்து பெருமை சேர்க்க வேண்டும்.

ஜூலை 30 ஆம் தேதி அவரது பிறந்த நாள் வரும் வேளையில், அவரது பெயர் சூட்டப்பட்ட புதுகை அரசு தலைமை மருத்துவமனையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் உருவச் சிலையை நிறுவுவதாக தமிழக முதல்வர் அறிவித்து பெருமை சேர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.