/

போக்குவரத்துப் பணிமனை அமையுமா?

ஆலங்குடி,மே 18: அறிவிக்கப்பட்டும், தொடங்கப்படாமலுள்ள ஆலங்குடி அரசுப் போக்குவரத்துப் பணிமனையையும், அதற்கு முன் தொடங்கிய தாற்காலிகப் போக்குவரத்து அலுவலகத்தையும் செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:23 pm

கே. சுரேஷ்குமார்

ஆலங்குடி,மே 18: அறிவிக்கப்பட்டும், தொடங்கப்படாமலுள்ள ஆலங்குடி அரசுப் போக்குவரத்துப் பணிமனையையும், அதற்கு முன் தொடங்கிய தாற்காலிகப் போக்குவரத்து அலுவலகத்தையும் செயல்படுத்த வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  ஆலங்குடி வழியாக சென்னை, புதுக்கோட்டை, ஈரோடு, திருப்பூர், சிவகங்கை, தஞ்சாவூர், கோவை, மன்னார்குடி, பொன்னமராவதி, பழனி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, கறம்பக்குடி, கந்தர்வகோட்டை, வடகாடு உள்ளிட்ட ஊர்களுக்கு ஏறத்தாழ 28 தொலைதூரப் பேருந்துகளும், 19 நகரப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

  இந்நிலையில், கூடுதலாகப் பேருந்துகளை இயக்கவும், பேருந்துகளைப் பராமரிக்கவும் ஏதுவாக, ஆலங்குடியில் அரசுப் போக்குவரத்து பணிமனையை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தினர்.

  ஆலங்குடி அருகேயுள்ள ராசியமங்கலத்தில் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான இடமிருந்தும், பணிமனை அமையவில்லை. இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டன.

  இந்நிலையில், கடந்தாண்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என். நேரு, ஆலங்குடியில் அரசு இடத்தில் போக்குவரத்துப் பணிமனை விரைவில் தொடங்கப்படும். அதுவரை தாற்காலிகமாக வாடகைக் கட்டடத்தில் இயங்கும் என்று நேரு அறிவித்தார்.

  இதைத் தொடர்ந்து, ஆலங்குடி அரசு மருத்துவமனை எதிரே, வாடகை கட்டடத்தில் பேருந்துகளில் அவ்வப்போது ஏற்படும் சிறிய அளவிலான  பழுதுகளை நீக்குவதற்கு பணியாளர்கள் மற்றும் உபகரணங்களுடன் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகம் தொடங்கப்பட்டது.

  இந்நிலையில், அண்மைக்காலமாக இங்கு பணியாளர்களும் இல்லை; பழுது நீக்கத் தேவையான உபரகணங்களும் இல்லை. இதனால், நீண்ட தொலைவு செல்லும் பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

  அண்மையில் புதுகையிலிருந்து வந்த அரசுப் பேருந்தின் சக்கரம் பழுதானதால், அந்தப் பேருந்து ஆலங்குடி பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டது. அந்தச் சக்கரத்துக்குப் பதிலாக மாற்றுச் சக்கரமும் இல்லை. அதைக் கழற்றி எடுக்க உபகரணங்களும் இல்லை.

  இதனால், அந்த வழியாகச் சென்ற தனியார் பேருந்தின் உபகணங்களை வாங்கி சக்கரத்தை கழற்றி, அதை புதுக்கோட்டைக்கு எடுóத்துச் சென்று பழுது நீக்கியபிறகு, அந்தப் பேருந்து புறப்பட்டுச் சென்றது. இதுபோன்ற நிகழ்வுகள் ஆலங்குடியில் தொடர்கின்றன.

  "பணிமனையை விரைவில் அமைக்க வேண்டும். காலம் தாழ்த்தினால் பொதுமக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்' என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.பி. முத்துக்குமரன்.

  "ஆலங்குடியில் போக்குவரத்து பணிமனை அமையாததால், கிராமப் பகுதிக்கு போதிய பேருந்துகள் இல்லாமல் மக்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். தற்போது இயங்கும் பேருந்துகளிலும் நெரிசல் காணப்படுகிறது. எனவே, பழுதாகும் பேருந்துகளை பழுதுநீக்க, அதற்கான கருவிகளுடன் பணியாளர்களை நியமிக்க வேண்டும்' என்றார் வணிகர் சங்கத் தலைவர் மெ.அ. தனபால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.