/

துறையூர் கிளை நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் அமைவது எப்போது?

துறையூர், மே 22: துறையூர் கிளை நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் அமைவது எப்போது என்று வாசகர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் கிளை நூலகம் 1955 ஆம் ஆண்டு வாடகைக் க

News image
Updated On :27 டிசம்பர் 2023, 3:59 pm

என். கணேஷ்சங்கர்

துறையூர், மே 22: துறையூர் கிளை நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் அமைவது எப்போது என்று வாசகர்களும், பொதுமக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் கிளை நூலகம் 1955 ஆம் ஆண்டு வாடகைக் கட்டடத்தில் செயல்பட தொடங்கியது. பின்னர், இடப் பற்றக்குறை காரணமாக பல வாடகைக் கட்டடங்களுக்கு மாறி, தற்போது பேருந்து நிலையம்அருகே ரூ. 4000 மாத வாடகைக்கு போதிய இட வசதியற்ற கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.

 இக் கிளை நூலகம் சொந்தக் கட்டடத்தில் இயங்க வேண்டும் என நூலகரும், வாசகர் வட்டத்தினரும் கடந்த 10 ஆண்டுகளாகப் போராடி வருகின்றனர்.

 இந்நிலையில், 20-வது வார்டில் அரசுக்கு சொந்தமான இடத்தில் கிளை நூலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்ட அனுமதியளித்து, நகர்மன்றம் தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர், 3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு வருவாய்த் துறையும் இதற்கான கோப்பை அனுமதித்தது.

தற்போது இந்தக் கோப்பு சென்னை பொது நூலக இயக்குநர் அனுமதிக்காக 2 ஆண்டுகளாக அவரது அலுவலகத்தில் காத்திருக்கிறது.

 நூலகத்திற்கு அடிமனை கிடைத்தால், புதியக் கட்டடம் ரூ. 50 லட்சத்தில் 3 தளங்களாக அமைக்கப்படும் என்று மாவட்ட நூலகத் துறை சார்பில் முதலில் கூறப்பட்டது. ஆனால், வருவாய்த் துறை அனுமதிக்குப் பின்னர் 2 தளங்கள் ரூ. 30 லட்சத்தில் அமைப்பதற்கு பரிந்துரைக்கப்பட்டு, அதற்கான கோப்பு சென்னை பொது நூலக இயக்குநருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், வாசகர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, 3 தளங்களில் கிளை நூலகம் அமைக்க வேண்டும் என வாசகர் வட்டத்தினர்,நூலகரால் கோரிக்கை விடப்பட்டது.

இதையேற்று, 3 தளங்களில் கட்டடம் கட்ட மதிப்பீடு கேட்டு சென்னை பொது நூலக இயக்ககம் கோப்பை மீண்டும் அனுப்பியது. இதையடுத்து, ரூ. 48 லட்சத்தில் புதிய திட்ட மதிப்பீடு பொதுப் பணித் துறை சார்பில் வழங்கப்பட்டு, கோப்பு சென்னைக்கு அனுப்பப்பட்ட நிலையில், அங்கு 2 ஆண்டுகளாக பொது நூலக இயக்குநர் அனுமதிக்காகக் காத்திருக்கிறது.

திருச்சி மாவட்டத்தில் முதலில் கணினியை நன்கொடையில் பெற்று, இணையதள வசதியை ஏற்படுத்திய பெருமை இக் கிளை நூலகத்திற்கே உண்டு. தற்போது இங்கு 4 கணினிகள்,குறைந்த கட்டணத்தில் அகன்ற அலை வரிசை இணையதள வசதி, ஜெராக்ஸ் இயந்திர வசதி, 140 புரவலர்கள், 40000-த்துக்கும் மேற்பட்ட நூல்கள், 7500-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள், தினமும் 200-க்கும் குறையாமல் வரும் வாசகர்கள் என இந்த நூலகத்தின் பயன்பாடு விரிந்து கொண்டே செல்லும் நிலையில், போதிய இட வசதி இல்லாததால் கிளை நூலக நிர்வாகம் திணறி வருகிறது.

இங்குள்ள வாசகர் வட்டம் ஆண்டுதோறும் நூலக வாரம், உலக மகளிர் தினம், உலக புத்தக தினம், மாதந்தோறும் சிறப்புக் கூட்டம், அவ்வப்போது போட்டித் தேர்வர்களுக்கு விழிப்புணர்வுக் கூட்டம் என பல நல்ல பணிகளைத் தேர்வு செய்து நடத்தி வருகிறது.

இதற்காக, 2009-ம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் சிறந்த வாசகர் வட்டமாகத் தேர்வு செய்யப்பட்டு, அதன் தலைவர் டி. நடராஜனை அமைச்சர் கே. என். நேருவும், மாவட்ட ஆட்சியர் தா. சவுண்டையாவும் பாராட்டினர்.

எனவே, போதிய இட வசதியின்றிச் செயல்படும் இக் கிளை நூலகம் விரைவில் சொந்தக் கட்டடத்தில் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.