திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

பேராவூரணி, செப். 9:   தமிழகத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி பாரம்பரிய பாசன முறைக்கு விவசாயிகளை மாற்ற வேண்டும் என்று இயற்கை வேளாண்மையை விரும்புபவர்களும், ச

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 5:29 pm

கே. கான்முகமது

பேராவூரணி, செப். 9:   தமிழகத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வாரி பாரம்பரிய பாசன முறைக்கு விவசாயிகளை மாற்ற வேண்டும் என்று இயற்கை வேளாண்மையை விரும்புபவர்களும், சமூக ஆர்வலர்களும் எதிர்பார்க்கின்றனர்.

   கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் ஏரி, குளம், கிணற்றுப் பாசன முறையில் விவசாயம் நடைபெற்றது. 1950-ல் விவசாயத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்த ஏரி நீரின் அளவு 17.37 சதமாக இருந்தது. 2010-வது ஆண்டில் 6.1 சதமாக குறைந்தது.

    தமிழகத்திலுள்ள ஆயிரக்கணக்கான ஏரிகள் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவை இருந்ததற்கான அடையாளங்களே இல்லாமல் போய்விட்டது. பெரும்பாலான கிராமப்புறங்களில் நீர்நிலை புறம்போக்குகளை ஏழை, எளிய மக்கள் ஆக்கிரமித்து குடிசை வீடுகள் கட்டியுள்ளனர். நகர்ப்புறங்களில் தொழில்சாலைகளாகவும், கல்லூரிகளாகவும் மாற்றம் பெற்றுள்ளன.

    இதனால், பாரம்பரிய பாசன முறை குறைவதால், விவசாயத்துக்கான செலவினங்கள் அதிகரித்து, விவசாயிகள் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதால் சுற்றுச்சுழலும் பாதிக்கப்படுகிறது. தட்பவெப்ப நிலையை சீராக வைத்திருப்பதில் நீர்நிலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

   ஆனால், நீர்நிலைகள் வற்றுவதால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை ஈடுசெய்ய நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. 1950-ம் ஆண்டுகளில் ஆழ்குழாய் மூலம் பாசனம் பெறுவது 0.6 சதமாக இருந்தது. 2010-ல் 31.8 சதமாக உயர்ந்தது. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதால் நீர்மட்டம் குறைந்து, பூமியின் தட்டுகளுக்கு இடையே இருக்கும் நீரும் உறிஞ்சப்படுவதால் நிலநடுக்கம் ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.

   தஞ்சை மாவட்டத்தில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமாக 526 ஏரிகள் உள்ளன. இந்த மாவட்டத்தைப் பொருத்தவரை காவிரி நீர் பாய்கிற இடங்களிலுள்ள ஏரிகள் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமாகவும், மற்ற ஏரிகள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமாகவும் உள்ளன.

   உள்ளாட்சி அமைப்புகளுக்குச் சொந்தமான ஏரிகள் சரியாகப் பராமரிக்கப்படாமல் கழிவுநீர் சேரும் இடமாகவும், குப்பைகளைக் கொட்டவும் பயன்படுத்தப்படுகின்றன. பொதுப் பணித் துறை ஏரிகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பிலேயே உள்ளன.

   கடந்த 2005-ல் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த மார்க்கண்டேய கட்ஜு அளித்த தீர்ப்பில், நீர்நிலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றவும், அவை மாசுபடாமல் தடுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

   அதற்குப் பதிலளித்த தமிழக அரசு, ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் தலைமையிலும்  குழு அமைக்கப்பட்டு, அந்தந்த மாவட்டத்திலுள்ள நீர்நிலைகள் கணக்கெடுக்கப்பட்டு, அதன்பிறகு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தது.

ஆனால், இன்றுவரை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. கணக்கெடுப்பு நடத்தியிருந்தால் தமிழகத்திலுள்ள ஏரி, குளங்கள் பற்றிய முழு விவரங்கள் கிடைத்திருக்கும்.

   எனவே, தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் உயிர் வாழ அடிப்படை ஆதாரமான தண்ணீருக்காக எதிர்காலச் சந்ததியினர் தவிக்காமல் இருக்கும் வகையிலும், பாரம்பரிய விவசாய முறை மீண்டும் தழைத்தோங்கும் வகையிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரி, குளங்களைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும்.

   மேலும், நிலத்தடி நீரை உறிஞ்சி கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை முழுமையாகத் தடுப்பதுடன், நீர்நிலைகளை மறைத்தோ, நீர்நிலைகளில் குடியிருப்புகளைக் கட்டுவதையோ தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், உரிய அலுவலர்களைக் கொண்டு இவற்றைக் கண்காணிக்கவும் வேண்டும்.

இதன்மூலம், நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் தடுக்கப்படுவதுடன், விவசாயம் மேலும் வளர்ச்சியடையும் என்கின்றனர் இயற்கை வேளாண் ஆர்வலர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.