பாபநாசம்,செப். 16: தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள உத்தமதானபுரத்தில் அமைந்துள்ள, தமிழுக்கு அருந்தொண்டாற்றிய உ.வே.சா. நினைவு இல்லத்தில் அவர் நினைவைப் போற்றும் வகையிலும், தமிழ் அறிஞர்கள், தமிழ் பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் தமிழ் ஆய்வு மையம் தொடங்கப்பட வேண்டும் என இந்தப் பகுதி தமிழ் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழுக்கு பல அறிய தொண்டுகள் செய்து, செந்தமிழ் மொழியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு உள்ளிட்ட நூல்களையும், 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி மற்றும் தமிழ் இலக்கியங்களில் உள்ள அரிய நூல்கள் உள்ளிட்டவற்றை தேடிக் கண்டறிந்து, ஓலைச்சுவடிகளை ஒப்புநோக்கி, அவற்றை நூல்கள் வடிவில் வெளிக்கொண்டு வந்த பெருமைக்குரியவர் உ.வே.சா.
அவர் வாழ்ந்த இல்லத்தை முந்தைய அதிமுக அரசு நினைவு இல்லமாக அறிவித்து, முற்றிலும் புதிதாகக் கட்ட நிதி ஒதுக்கீடு செய்து, 32 லட்சத்தில் தரைத் தளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய புதிய இல்லம் கட்டி முடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்போதைய திமுக ஆட்சியில் தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி அந்த இல்லத்தை கடந்த 27.4.2008-ல் திறந்துவைத்தார்.
நினைவு இல்லத்தின் தரைத் தளத்தில் 50 ஆயிரத்தில் உ.வே.சாவின் மார்பளவு உலோகச் சிலை அமைக்கப்பட்டது.
திறப்பு விழாவின் போது, அந்தப் பகுதியில் உள்ள தமிழ் ஆர்வலர்கள், பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, உ.வே.சா. நினைவு இல்லத்தில் தமிழ் அறிஞர்கள், தமிழ் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் பயனடையும் வகையில் அரிய தமிழ் ஓலைச் சுவடிகள், தமிழ் நூல்கள் அடங்கிய தமிழ் ஆய்வு மையம் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டது.
ஆனால், இதுவரை அதற்கான எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படாதது இந்தப் பகுதி தமிழ் ஆர்வலர்களிடமும், பொதுமக்களிடமும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது நினைவு இல்லத்தின் முதல் தளத்தில் மாவட்ட நூலகத் துறை சார்பில், கிராமப்புற நூலகம் மட்டுமே இயங்கி வருகிறது.
இந்த நினைவு இல்லத்தில் ஆண்டுதோறும் உ.வே.சா. பிறந்த நாளான பிப்ரவரி 19 அன்று மாவட்ட நிர்வாகம், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் மைசூரை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் செம்ழொழி உயராய்வு மையம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் உள்ளிட்டவற்றின் சார்பில், பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ் ஆய்வு மையம் அமைப்பதற்கான எந்தவிதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உ.வே.சா. நினைவு இல்லத்தில் தமிழ் ஆய்வு மையம் தொடங்குவதற்கு உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
தமிழ் அறிஞர்கள், தமிழில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் தமிழின் தொன்மையையும், இனிமையையும் உணர்ந்து கொள்ளும் வகையிலும், மேலும் பல புதிய கருத்துகளைக் கண்டுணர்ந்து தமிழுலகிற்கு அளிக்கும் வகையிலும் இந்த தமிழ் ஆய்வு மையத்தை விரைந்து தொடங்க வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதுகுறித்து உத்தமதானபுரம் ஊராட்சித் தலைவர் கோகிலா முத்தமிழ்ச்செல்வன் கூறியது:
உ.வே.சா. நினைவு இல்லம் திறக்கப்பட்ட போது, விழாவில் கலந்து கொண்ட மத்திய, மாநில அமைச்சர்கள், மாவட்ட நிர்வாகத்தினர், செம்மொழி உயராய்வு மைய அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் ஊர் மக்கள் சார்பில், பாபநாசம் பேருந்து நிலையத்திற்கு உ.வே.சா. பெயரைச் சூட்ட வேண்டும், அவரது நினைவைப் போற்றும் வகையில், இந்தப் பகுதியில் நினைவு வளைவு அமைக்க வேண்டும், உ.வே.சாவிற்கும், தமிழுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் அவரது நினைவு இல்லத்தில் தமிழ் ஆய்வு மையம் தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
ஆனால், இதுவரை எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறையினர் உ.வே.சா. நினைவு இல்லத்தில், தமிழ் கூறும் நல்லுலகம் பெருமைப்படத்தக்க வகையில், தமிழ் ஆய்வு மையம் அமைக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதுவே தமிழை அழியாமல் காத்துத் தந்த தமிழ்த் தாத்தாவிற்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதையாகும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழில் வெளியாகும் வாழ - 2!

7 ஆண்டுகளுக்குப் பின்.. இந்தியாவில் நங்கூரமிட்ட ஈரானிய எண்ணெய் கப்பல்கள்

நெல் ஊக்கத்தொகை: முதல்வர் ஸ்டாலின் கேட்ட கடிதத்தை வெளியிட்ட நிர்மலா சீதாராமன்!
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

