அரசுப் போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர்களின் அவலநிலை மாறுமா ?

பேராவூரணி,செப். 24:  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் தங்களை கொத்தடிமைப்போல் நடத்துவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.    2007-08

பேராவூரணி,செப். 24:  தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஓட்டுநர், நடத்துநர்கள் தங்களை கொத்தடிமைப்போல் நடத்துவதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்கின்றனர்.

   2007-08 ஆம் ஆண்டுகளில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு அடிப்படையில் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டு, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகங்களில் பணியில் சேர்க்கப்பட்டனர்.

  இவர்களில் பெரும்பாலோனோர் தனியார் பேருந்து உரிமையாளர்களின் அடக்குமுறையில் பாதிக்கப்பட்டு, அரசுப் பணியில் நிம்மதியாக இருக்கலாம் என்று பணியில் சேர்ந்தவர்கள். ஆனால், ஓட்டுநர்களும் நடத்துநர்களும் போக்குவரத்துக்கழக அதிகாரிகளின் போக்கால் அவதிப்படுகின்றனர்.

   போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகள் டீசலை சிக்கனமாக கையாள வேண்டும், உதிரிபாகங்களை மிச்சப்படுத்த வேண்டும் என ஓட்டுநர்களையும், வசூல் அதிகமாக காட்ட வேண்டுமென நடத்துநர்களையும் நிர்ப்பந்திக்கிறார்கள்.

  டீசலை மிச்சப்படுத்தப்பட வேண்டுமென நிர்பந்திக்கும் அதிகாரிகள் பேருந்துகளை முறையாக பராமரிப்பதில்லை. மேலும், எல்லா நிறுத்தங்களிலும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க வேண்டுமெனவும் நேரத்தை துல்லியமாக பின்பற்ற வேண்டுமெனவும் உத்தரவிடுகின்றனர்.

   என்ஜின்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் டீசலை அதிகம் பயன்படுத்த வேண்டியுள்ளது. போக்குவரத்து நெரிசல், அனைத்து நிறுத்தங்களிலும் நின்று செல்வது போன்ற காரணங்களால் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்துகளை இயக்க முடிவதில்லை.

  ஆனால், டீசல் சிக்கனத்தை கடைபிடிப்பதில்லை என்றும், துல்லியமான நேரத்தில் பேருந்தை இயக்கவில்லை என்றும் ஓட்டுநர்களுக்கு அதிகாரிகள் தண்டனை அளிக்கின்றனர்.

  மேலும், 240 நாள்கள் பணி செய்தால் மட்டுமே பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும் என்ற விதியுள்ளதால் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தொடர்ச்சியாக பணி வழங்காமல் இடைவெளி விட்டு வழங்குவதால் 2007 ஆம் ஆண்டில் நியமனம் செய்யப்பட்டவர்கள் இன்னமும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளனர்.

  பணி நிரந்தரம் செய்யப்படாததால் பல்வேறு பிரச்னைகளை ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பணி நிரந்தரம் செய்யப்படாதவர்கள் எதிர்பாராதவிதமாக சிறு விபத்து ஏற்படுத்தினால்கூட பணியிலிருந்து நீக்கம் செய்யப்படுவார்கள்.

  நிர்வாக ரீதியாக பணிமனையின் மேலாளர், மேற்பார்வையாளர், உதவிப் பொறியாளர்கள் அரசு ஊழியர்களாகவும், ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களை கார்ப்பரேசன் ஊழியர்களாகவும் உள்ளதால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அரசின் முழுமையான சலுகைகள் கிடைப்பதில்லை.

  எனவே, போக்குவரத்துத் துறை நிர்வாகத்தின் முதுகெலும்பாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் மீது கவனம் செலுத்தி தமிழகம் முழுவதும் புதிதாக நியமனம் செய்யப்பட்ட அனைத்து  ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com