பிப். 9 -ல் சட்டப்பேரவை முற்றுகை

திருச்சி, ஜன. 8: விடுதி மாணவர்களின் உணவுப் படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப். 9 - ல் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார் இந்திய மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் வீ. கரிகால
Updated on
1 min read

திருச்சி, ஜன. 8: விடுதி மாணவர்களின் உணவுப் படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப். 9 - ல் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது என்றார் இந்திய மாணவர் சங்க மாநிலத் துணைத் தலைவர் வீ. கரிகாலன்.

  இதுகுறித்து திருச்சியில் சனிக்கிழமை அவர் அளித்த பேட்டி:

  "தமிழகத்தில் ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் நலனுக்காக உள்ள 3 ஆயிரம் விடுதிகளில், சுமார் 2 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.  இந்த விடுதிகளில் கழிப்பறை, குளியலறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.  இவற்றை உடனடியாக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும்.

  பல அரசு விடுதிகள் பழுதடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன.  இதனால், மாணவர்கள் அச்சத்துடன் விடுதிகளில் தங்கிப் படித்து வருகின்றனர். சிறிய அறைக்குள் முப்பது மாணவர்கள் வரை தங்கிப் படிக்கும் நிலையும் உள்ளது. எனவே, மாணவர்களின் நலன் கருதி புதிய விடுதிகளைத் தமிழக அரசு கட்டித் தர வேண்டும்.

  விடுதியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நாள் ஒன்றுக்கு உணவுப் படியாக ரூ. 15.50, கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 18.50-ஐ அரசு வழங்குகிறது. விலைவாசி உயர்வால், இந்தத் தொகையில் மாணவர்களுக்கு தரம் குறைந்த உணவே வழங்கப்படுகிறது.

  கேரளத்தில் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 46-ம், கல்லூரி மாணவர்களுக்கு ரூ. 50-ம் உணவுப் படியாக வழங்கப்படுகிறது.

  தமிழகத்தில் சிறைவாசிகளுக்கு உணவுப்படியாக ரூ. 35 வழங்கப்படுகிறது. காவல் துறை மோப்ப நாய்களுக்கு ரூ. 62 வழங்கப்படுகிறது. ஆனால், ஏழை மாணவர்களின் உணவுப் படியை உயர்த்த அரசு மறுக்கிறது.

  எனவே, விடுதி மாணவர்களின் இந்தக் குறைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, பிப். 9-ல் சட்டப்பேரவை முற்றுகைப் போராட்டம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது' என்றார் அவர்.

  முன்னதாக, இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற விடுதி மாணவர் கோரிக்கை மாநாட்டுக்கு வீ. பழனி, அருளரசன், ஸ்ரீமதி, அருணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் எம். ஜயசீலன் மாநாட்டைத் தொடக்கி வைத்தார். முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கருப்பன்,  தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் நந்தலாலா உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர்.

  விடுதி மாணவர்களின் நிலை குறித்த அறிக்கையை பா. சரவணத்தமிழன் அளித்தார். செந்தமிழ்ச் செல்வன், தங்கமணி, நாராயணன், பழனிவேல், ஜோதிபாசு ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர்.

  இந்திய மாணவர் சங்கத் துணைத் தலைவர் வீ. கரிகாலன் நிறைவுரையாற்றினார்.

  பி. விநோதினி வரவேற்றார். செ. ராஜ்குமார் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com