"பிரச்னைகளை எதிர்கொள்ளவே கல்வியும், அறிவும் தேவை'
திருச்சி, ஜன. 8: பிரச்னைகளை எதிர்கொண்டு வாழத்தான் கல்வியும், அறிவும் தேவை என்றார் ஆந்திர மாநிலம், நலகொண்டா மாவட்டத் துணை ஆட்சியர் ஜி. வீரபாண்டியன் ஐஏஎஸ். திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலை


திருச்சி, ஜன. 8: பிரச்னைகளை எதிர்கொண்டு வாழத்தான் கல்வியும், அறிவும் தேவை என்றார் ஆந்திர மாநிலம், நலகொண்டா மாவட்டத் துணை ஆட்சியர் ஜி. வீரபாண்டியன் ஐஏஎஸ்.
திருச்சி சமயபுரம் எஸ்ஆர்வி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற "விஸ்டா 2011'-ல் (ஆண்டு விழா) சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
"நான் பிறந்த சூழலுக்கும், இப்போது இருக்கும் நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு விரிவானது. பொதுவாக நாம் உயர்வதற்குக் காரணம் எது என்பதைப் புரிந்து கொள்வது முக்கியமானது.
5 ஆம் வகுப்பில் டீ கடையில் வேலை பார்த்தேன், 6 ஆம் வகுப்பில் இரும்புப் பட்டறையில் வேலை பார்த்தேன், 7 ஆம் வகுப்பில் கோழிக் கறிக்கடை, சைக்கிள் கடை, வீதி உணவகம் ஆகியவற்றில் வேலை பார்த்தேன். 9 ஆம் வகுப்பின்போது அரவிந்த் கண் மருத்துவமனையில் என் அம்மாவுடன் துப்புரவுப் பணியில் ஈடுபட்டேன்.
எஸ்எஸ்எல்சி படித்தபோது, அப்பாவுடன் எவர்சில்வர் பாத்திரங்களைக் கூவிக்கூவி விற்றேன். இடையிடையே பிரியாணி கடையில் இருந்தேன், புரோட்டா மாஸ்டர் ஆனேன். பிளஸ் 2 படிப்பில்தான் புவியியலில் மாநிலத்தின் இரண்டாம் இடத்தைப் பெற்றேன். அப்போதுதான் முதல்வர் கருணாநிதி என்னை அழைத்து ரூ. ஒரு லட்சம் வழங்கினார்.
பிறகு கல்லூரிப் படிப்பு, ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி. இப்போது நலகொண்டா மாவட்டத்தின் துணை ஆட்சியர்.
எந்த நிலையில், சூழலில் வாழ்கிறோம், பிரச்னை என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதைத் தீர்க்கப் போராடுவதுதான் மனித குலத்தின் அடிப்படைப் பண்பு. பிரச்னைகளைச் சரிசெய்யும் வழியைக் கண்டறிந்து, அந்த வழியில் பயணம் செய்ய வேண்டும். பிரச்னைகளோடு வாழ்வதுதான் ஞானம். அதாவது பிரச்னைகளை எதிர்கொண்டு, சமாளித்து வாழத்தான் கல்வியும், அறிவும் தேவை. பிரச்னைகளே இல்லாத இடத்தில் வாழ இவையெதுவும் தேவையில்லை.
கல்விதான் பிரச்னைகளை எதிர்கொள்ளத் தேவையான சிறந்த ஆயுதம். கூர்மையான சக்தி வாய்ந்த கருவி. தீவிர முயற்சியும், சலிக்காத உழைப்பும் நினைத்த காரியங்களைச் சாதிக்கச் செய்யும். இவை இருந்தால் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும்' என்றார் வீரபாண்டியன்.
விழாவுக்கு பள்ளித் தலைவர் ஏ. ராமசாமி தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் பி. சுவாமிநாதன், பொருளாளர் எஸ். செல்வராஜன், துணைத் தலைவர் எம். குமரவேல், இணைச் செயலர் பி. சத்தியமூர்த்தி, முதல்வர் க. துளசிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பரதம், பறையாட்டம், கோலாட்டம், கதக்களி, குச்சிப்புடி, மணிப்புரி உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடம்பெற்றன. விழாவில், மாணவ, மாணவிகளுடன் பெற்றோர்கள் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர். பேராசிரியர் பாலகிருஷ்ணன் சிறப்பிக்கப்பட்டார்.
படிப்பில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும் அளிக்கப்பட்டன. எழுத்தாளர் ஞாநி எழுதிய "மகுடிக்காரன்' என்ற நாடகமும் விழாவில் நடத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...