போக்குவரத்துக்கு இடையூறாகும் மணல் லாரிகள்

திருவெறும்பூர், நவ. 15: திருச்சி திருவானைக்கா கொண்டையம்பேட்டை இரணியம்மன் கோயில் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிக
Updated on
1 min read

திருவெறும்பூர், நவ. 15: திருச்சி திருவானைக்கா கொண்டையம்பேட்டை இரணியம்மன் கோயில் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மணல் லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

  ஏற்கெனவே, இது பிரதான சாலை என்பதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.

  இந்நிலையில், திருச்சி திருவானைக்கா அருகேயுள்ள உத்தமர்சீலி மணல் குவாரியில் திருச்சி மாவட்ட லாரிகள் மட்டுமல்லாமல், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட  பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரும் லாரிகளும் மணல் எடுத்துச் செல்கின்றன.

  இந்த லாரிகளுக்கு மட்டும் கொண்டையம்பேட்டை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு அனுமதிச் சீட்டும், பொன்னுரங்கபுரம் கொள்ளிடம் கரைக்கு செல்ல ஒரு அனுமதிச் சீட்டும் வாங்கிக் கொண்டு, அதன் பிறகு உத்தமர்சீலி, கிளிக்கூடு பகுதியில் மணல் எடுக்க கட்டண அனுமதிச் சீட்டும் பெற்ற பிறகே மணல் எடுக்கப்படுகின்றன.   இந்த வரிசையில் நாள்தோறும் சுமார் 650-க்கும் அதிகமான லாரிகள் மணல் அள்ளிச் செல்கின்றன. இப்படி வரிசையில் நிற்கும் லாரிகள் மணல் அள்ள ஒரு நாளாகிறது. இதனால், நாள்தோறும் கொண்டையம்பேட்டை இரணியம்மன் கோயில் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, அணுகு சாலை, பொன்னுரங்கபுரம், திருவளர்சோலை, பனையபுரம் பகுதியிலுள்ள சாலைகள் என ஏறத்தாழ 13 கி.மீ. தொலைவுக்கு உள்ள சாலைகள், மணல் லாரிகளால்  ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் லாரிகளை நிறுத்திவிட்டு, ஓட்டுநர்கள் அப்படியே தூங்கிவிடுகின்றனர்.   இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பகல், இரவு என எந்த நேரமாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட செல்ல வழியில்லாமல் சாலைகளை லாரிகள் முற்றிலும் ஆக்கிரமித்து நிற்கின்றன.

   இதனால், பொன்னுரங்கபுரம் உள்ளிட்ட கிராமப் பகுதி மக்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் சாலையைக் கடக்க முடியாமல் நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.

   இதுகுறித்து கொண்டையம்பேட்டை, பொன்னுரங்கபுரம் பகுதி மக்கள் கூறியது:   கடந்த ஆட்சியில் மணல் எடுக்க திருச்சி மாவட்டத்தில் உள்ள லாரிகள் மட்டும்தான் வந்தன. இதனால், எங்களுக்கு எந்தவிதப் பிரச்னையும் இல்லை. தற்போது, வெளி மாவட்டங்களிலிருந்து தினமும் சுமார் 650-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து செல்கின்றன. இதனால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, சாலையை கடந்து செல்ல சிரமமாக உள்ளது.

  எனவே, தமிழக அரசு இந்த மணல் லாரிகள் அனைத்தும் கொள்ளிடம் பாலம் அருகே ஆற்றின் கரையிலேயே செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது மணல் குவாரிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்' என்றனர் கிராம மக்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com