/

தொடரும் மின் தடையால் விவசாயம் பாதிப்பு

ஆலங்குடி, அக். 16: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் தொடரும் மின் தடையால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியானது விவசாயம் சாகுபடிக்கு ஏற்ற பக

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:57 pm

கே. சுரேஷ்குமார்

ஆலங்குடி, அக். 16: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் தொடரும் மின் தடையால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

   புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி பகுதியானது விவசாயம் சாகுபடிக்கு ஏற்ற பகுதியாக இருப்பதால், மின்சாரத்தின் தேவை அதிகரித்துள்ளது. வானம் பார்த்த பூமியான இந்தப் பகுதியில், ஆழ்குழாய் கிணறுகளைக் கொண்டு வாழை, கரும்பு, நெல், கடலை ஆகிய பயிர்களுடன், கோடைகாலத்தில் வெள்ளரி, பூசணி, சோளம் போன்ற பயிர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

  நாளொன்றுக்கு 20 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்த  இந்தப் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக குறைவான மின் உற்பத்தி என்ற தமிழக அரசின் அறிவிப்பால், படிப்படியாகக் குறைந்து, தற்போது 5 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது.

   நடைமுறையில் உள்ள 5 மணி நேரமும் தடையின்றி வழங்கப்படுகிறதா என்றால் அதுவும் கிடையாது. எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் என்று தெரியாத நிலை உள்ளது. எந்தவிதப்  பராமரிப்பும் இல்லாமல் கேட்பாரற்று இயங்கும் மின்மாற்றி பழுதடைந்தால், அதைச் சீரமைக்க பல மாதங்களாகின்றன.

   தொடர்ந்து மின் தடை, சீரற்ற மின்னழுத்தம் ஆகியவற்றால் ஆழ்குழாய்க் கிணற்றின் மின் சாதனங்களும் பழுதடைகின்றன. இதனால், விவசாயிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

   ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு, தெற்குப்பட்டி சாலையில் கடந்த மாதம் பழுதடைந்த மின் மாற்றி இன்னும் சரி செய்யப்படவில்லை. இதேபோல, ஆலங்குடி வட்டத்தில் நூற்றுக்கணக்கான மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளன. இதனால், விவசாயிகள் விவசாயத்தை வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

  இதுதொடர்பாக, அருகேயுள்ள சம்பந்தப்பட்ட மின் அலுவலகத்தைத்  தொடர்பு கொண்டால், அங்குள்ள அதிகாரிகள் உரிய பதில் அளிக்காமல் நழுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

   இதுகுறித்து விவசாயிகள் சங்க மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் எஸ்.பி. முத்துக்குமரன் கூறியது:

  புதுக்கோட்டை மாவட்டத்துக்கான அடிப்படைத் தேவைகளில் ஒன்று மின்சாரம். தொடர்ந்து மின் விநியோகம் பாதிக்கப்படுவதால், விவசாயிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனது பரிந்துரையில் சில இடங்களில் சிறப்பு கவனம் செலுத்தி மின்மாற்றி பொருத்தப்பட்டது.

  ஒரிசாவில் வெள்ளம், ஆந்திரத்தில் தனித் தெலங்கானா போராட்டம் போன்றவற்றால் மின் உற்பத்தி பாதிக்கப்படுவதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், ஓராண்டுக்குள் மின் உற்பத்தி சீராகும் என தமிழக முதல்வர் கூறுகிறார்.   இந்நிலையில், நிகழாண்டுக்கான பருவமழையும் காலம் தாழ்ந்து பெய்வதால், நடவுப் பணி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு இந்தப் பகுதிக்கு என தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.