விசைத்தறிகள் மூடப்படும் அபாயம்

அரியலூர், பிப். 9: அரியலூர் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டால் விசைத்தறிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.   அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டத்தில் ஜயங்கொண்டம், செங்குந்தபுரம், இலையூர், வாரியங்காவல்
Updated on
2 min read

அரியலூர், பிப். 9: அரியலூர் மாவட்டத்தில் தொடர் மின்வெட்டால் விசைத்தறிகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் வட்டத்தில் ஜயங்கொண்டம், செங்குந்தபுரம், இலையூர், வாரியங்காவல், கல்லாத்தூர், உட்கோட்டை போன்ற பகுதிகளிலும், ஆண்டிமடம் ஒன்றியத்தின் பல பகுதிகளிலும், செந்துறை ஒன்றியத்தில் செந்துறை, பொன்பரப்பி, கல்லாத்தூர், கொடுக்கூர், உஞ்சினி, நல்லாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெசவுத் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

  சுமார் 40,000-க்கும் மேற்பட்டோர் இத் தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில், தொழில் நசிவு காரணமாக தற்போது அரசின் கணக்குப்படி சுமார் 21,000 பேர் இருப்பதாகக் கூறப்படுகிறது.

  பல ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தத் தொழிலில் நல்ல வருவாய் கிடைத்து வந்த நிலையில், தொழிலில் ஏற்பட்ட நசிவால் பலர் இத் தொழிலை விட்டுவிட்டு, சென்னை, திருப்பூர் நகரங்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டனர்.

 இத் தொழிலைவிட மனமில்லாமல் பலர் தொடர்ந்து இதில் ஈடுபட்டு வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் சேலை உள்ளிட்ட துணிகள் ஆந்திர மாநிலத்தின் வெங்கடகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

ஆனால், தற்போதைய தொடர் மின் வெட்டால் அவர்களால் நெசவுத் தொழிலை தொடர்ந்து நடத்த முடியவில்லை.

  கைத்தறிப் பணிகளை மேற்கொள்ள மின்சாரம் தேவையில்லை என்றாலும், வீட்டுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் நெசவுக்கூடத்துக்கு போதிய வெளிச்சம் தேவை. இதனால், மின்சாரம் இல்லாமல் தறியை இயக்குவது என்பது கேள்விக்குறியாக உள்ளது.

  ஜயங்கொண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் சேலை உள்ளிட்ட அனைத்து ரகங்களும் நைஸ் ரகங்களாகும். அவ்வாறு செய்யும் போது கவனத்துடன் நாங்கள் பணியாற்ற வேண்டியிருக்கிறது. தற்போதைய மின்வெட்டால் நெசவுக்கூடம் எப்போது இயங்கும், எப்போது வேலை இருக்கும் என்பதே எங்களுக்குத் தெரியாமல் இருக்கிறது என்கின்றனர் இத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

  ஜயங்கொண்டம், அரியலூர் போன்ற ஊர்களிலேயே 10 மணி நேரம் மின் தடை இருக்கும் போது, கிராமங்களில் மின் தடை நேரம் பற்றிச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. கிராமங்களில் மின் விநியோகம் இருக்கும் நேரத்தை விட, மின்தடை செய்யப்படும் நேரம் அதிகமாக உள்ளது. இந்த பிரச்னையாலேயே நெசவுத் தொழில் கூடங்களை மூடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுவிட்டோம் என்கின்றனர் அவர்கள்.

கைத்தறியிலிருந்து விசைத்தறிக்கு மாறியவர்களின் பரிதாப நிலை: கைத்தறியிலிருந்து  விசைத்தறிக்கு மாறியவர்களின் நிலையும் பரிதாபமாக உள்ளது.  எப்போது மின்சாரம் வரும் என்பது தெரியாததால், பணிகளை மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகிறோம். எங்கள் தொழிலுக்கு மின்சாரம் அவசியம். தற்போதைய நிலையில், மின்சாரத்தை நம்பி பணிகளைத் தொடங்கினால் நாங்கள் வாங்கிய பணி ஆணைகளை முழுமையாக முடித்துத் தர முடியவில்லை என்கின்றனர் விசைத்தறி உரிமையாளர்கள்.

  தற்போதைய நிலையில், மூலப்பொருள்களின் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு உயர்வு போன்ற காரணங்களால் ஜெனரேட்டர்களை வைத்து நாங்கள் விசைத்தறிகளை இயக்கினால் லாபம் கிடைக்காது. பலன் ஏதும் இல்லாத போது, யாரும் அந்த முயற்சியில் இறங்கமாட்டார்கள் என்கிறார் விசைத்தறி உரிமையாளர் ஒருவர்.

  ஏற்கெனவே, இந்தத் தொழில் நசிவு காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய தொடர் மின் தடையால் தறிக்கூடங்களை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, மின் விநியோகத்தைச் சீரமைத்து இத் தொழிலில் ஈடுபட்டவர்களைக் காக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இவர்களின் எதிர்பார்ப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com