சுகாதார நிலையங்களில் ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்தப்படுமா?

அரியலூர், பிப். 28: அரியலூர் மாவட்டத்தில் சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் ஜெனரேட்டர் வசதி இருக்கிறது. மற்ற இடங்களில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். அரியல
Updated on
2 min read

அரியலூர், பிப். 28: அரியலூர் மாவட்டத்தில் சில ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் ஜெனரேட்டர் வசதி இருக்கிறது. மற்ற இடங்களில் ஜெனரேட்டர் வசதி இல்லாததால், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜயங்கொண்டத்தில் பெரிய அளவிலான அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இதில் அரியலூர் அரசு மருத்துவமனை மாவட்ட அளவிலான தலைமை மருத்துவமனையாக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புடன் செயல்பட்டு வருகிறது.

அது மட்டுமல்லாமல் அரியலூர் மாவட்டத்தில் கடுகூர், மணக்கால், விளாங்குடி, சுண்டக்குடி, திருமானூர், பொய்யூர், வெங்கனூர், கீழப்பழூர், குருவாடி, குழுமூர், இடையக்குறிச்சி, குமிழியம், மணக்குடையான், தா. பழூர், உதயநத்தம், மீன்சுருட்டி, விக்கிரமங்கலம், குணமங்கலம், ஆண்டிமடம், அணிக்குதித்சான், வாரியங்காவல், வரதராஜன்பேட்டை, விழப்பளம், உட்கோட்டை, சோழக்குறிச்சி உள்ளிட்ட 36 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 3 வட்டார மருத்துவமனைகளும், ஒரு வட்டம் சாராத மருத்துவமனையும், 115 துணை சுகாதார நிலையங்களும் இயங்கி வருகின்றன.

இவற்றில் அரியலூர் அரசு மருத்துவமனையும், ஜயங்கொண்டத்திலுள்ள அரசு மருத்துவமனையும் பெரிய அளவிலான மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் குறைந்தது 3,000 பேர் புறநோயாளிகளாகவும், ஏராளமானோர் உள்நோயாளியாகவும் இருந்து சிகிச்சை பெறுகின்றனர்.

இந்த மருத்துவமனைகளில் மிகப்பெரிய ஜெனரேட்டர் உள்ளது. ஜெனரேட்டர் வசதி அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு மருத்துவப் பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கு, ஸ்கேன் பிரிவு போன்ற அனைத்துப் பிரிவுகளுக்கும் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜெனரேட்டர் இயக்க டீசல் அளிக்கப்படவில்லையாம்.

ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனை வட்ட அளவிலான மருத்துவமனையாக உள்ளது. ஆனால், அவசரத் தேவை என்றால் மட்டும்தான் ஜெனரேட்டர் இயக்கப்படும் நிலை இருந்து வருகிறது. இதனால் மின் வெட்டு நேரங்களில் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகும் நிலைமை உள்ளது.

அதேபோல, கடூகூர், திருமானூர், குமிழியம், தா. பழூர், மீன்சுருட்டி, ஆண்டிமடம் உள்ளிட்ட 6 ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறிய, பெரிய அளவிலான இரு வகையான ஜெனரேட்டர்களும் உள்ளன.

மற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்வெர்ட்டர் வசதி இருந்தாலும், அதன்மூலம் பெரிய அளவிலான பயன் இல்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போது இன்வெர்ட்டருக்கு தேவையான மின்சாரத்தை சேமித்து வைப்பதற்குகூட மின்சாரம் போதிய அளவில் இல்லாததால், பல ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்வெர்ட்டர்கள் இருந்தும் பயன் இல்லாத நிலைதான் நீடித்து வருகிறது.

நகர்ப்புறங்களில் 4 மணி நேரம்தான் மின் வெட்டு என்று அறிவிக்கப்பட்டாலும், கிட்டத்தட்ட 7 முதல் 8 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதால், இந்தப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் ஜெனரேட்டர் அவசியம் தேவைப்படுகிறது.

ஆனால், டீசல் போதிய அளவு இருப்பில் இல்லாத நிலையால், அவசர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட அவசரத் தேவைக்கு மட்டும் உள்ள பகுதிகளுக்கு ஜெனரேட்டர் இயக்கப்படுகிறது.

எனவே, பள்ளிகளுக்கு ஜெனரேட்டர் வசதி அளிக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பு, மருத்துவமனைகளுக்கும் தேவை. கல்விக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தைப் போல, உடல்நலத்தைப் பேணிக் காக்கும் மருத்துவமனைகளுக்கும் முக்கியத்துவதும் தந்து, அதற்குரிய நடவடிக்கையை முதல்வர் மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com