திருவெறும்பூர், ஜன. 8: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு சூரியூர் கிராம மக்களிடையே எழுந்துள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகேயுள்ள சூரியூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று நடத்தப்படுவது வழக்கம்.
இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வரும் காளைகள் பங்கேற்கும்.
இங்கு ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்திடம் சூரியூர் கிராம முக்கியஸ்தர்கள் விண்ணப்பித்தனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகம் பொங்கலுக்கு சில நாள்கள் முன்னதாக கிராம முக்கியஸ்தர்களை அழைத்து, தில்லியிலுள்ள புளுகிராஸ் அமைப்பிடம் அனுமதி பெற்று வந்தால்தான் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்படும் எனக் கூறியது.
பொங்கலுக்கு சில நாள்களே உள்ள நிலையில், தில்லி சென்று புளுகிராஸ் அமைப்பிடம் அனுமதி வாங்கி வருவது இயலாது என்பதால், இக்கிராமத்தினர் மாட்டுப் பொங்கல் தினத்தன்று அனைவரது வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றி, மாடுகளை அவிழ்த்து விட்டனர்.
காலம் கடந்து மாவட்ட நிர்வாகம் கிராம மக்களை அழைத்துப் பேசியதால் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், நிகழாண்டு ஜல்லிக்கட்டு நடத்த கடந்த 45 நாள்களுக்கு முன்னதாகவே மாவட்ட ஆட்சியரை சந்தித்து அனுமதி கோரினர் சூரியூர் முக்கியஸ்தர்கள். ஆனால், இதுவரை மாவட்ட நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதுகுறித்து சூரியூர் கிராம மக்கள் கூறியது:
எங்கள் கிராமத்தினர் அனைவரும் வானம் பார்த்த பூமியை நம்பி வாழ்ந்து வருகிறோம். இதனால் எங்களுக்கு ஆடு, மாடுகள்தான் வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன. எனவே, மாட்டுப் பொங்கலுக்குதான் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து, ஜல்லிக்கட்டை நடத்தி வருகிறோம். ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை ஏற்று, கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரினோம். ஆனால், காலம் கடந்து எங்களை மாவட்ட நிர்வாகம் அழைத்து பேசியதால் ஜல்லிக்கட்டு நடத்தவில்லை.
இதனால் எங்கள் கிராமம் முழுவதும் மாட்டுப் பொங்கல் தினத்தன்று கறுப்புக்கொடி ஏற்றி துக்க நாளாக அனுசரித்தோம். இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் உள்ளோம் என்றனர். பொங்கலுக்கு இன்னும் சில நாள்களே உள்ளதால் மாவட்ட நிர்வாகம் சூரியூர் கிராம மக்களை அழைத்து ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஆலோசிக்க வேண்டும் என்கின்றனர் சூரியூர் கிராம மக்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.