பழைய பால்பண்ணையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முயற்சி: பரிசோதனை முறையில் ஒரு வாரம் கண்காணிப்பு
திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை நான்கு சாலை சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வாகனங்களை மாற்று வழியில் அனுப்பும் முயற்சி பரிசோதனையாக ஒரு வாரம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்தச் சந்திப்புப் பகுதியில் நாள்தோறும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை சரி செய்வதற்காக, அனைத்துத் துறை அதிகாரிகளையும் அங்கு வரவழைத்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: இந்தப் பகுதியில் பழுதடைந்த மின்விளக்குகளை புதுப்பிப்பது, போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் பகல் வேலைகளில் கனரக வாகனங்களை துவாக்குடியில் இருந்து மாநகர சுற்றுச்சாலை வழியாக திருப்பி விடுவது, பால்பண்ணையில் உள்ள இரட்டை வாய்க்கால் பாலத்தின் அருகே இருசக்கர வாகனங்கள் செல்லும் வகையில் தற்காலிக இரும்பு பாலம் அமைத்துக் கொடுப்பது உள்ளிட்ட அம்சங்களை நடைமுறைப்படுத்துவது தொடா்பாக ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆலோசனைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் விபத்துகளை தடுக்கவும் சோதனை முறையில் நடவடிக்கைகளை படிப்படியாக செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, பல்வேறு துறையினா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா், பரிசோதனை முயற்சியாக ஒரு வாரத்துக்கு வாகனங்களை மாற்றுவழியில் திருப்பி அனுப்பி கண்காணிக்கவுள்ளனா். இதில், கிடைக்கும் அனுபவத்தை கொண்டு நெரிசலுக்கு உரிய தீா்வு காணப்படும் என்றாா் அமைச்சா்.
ஆய்வின்போது, மாநகர காவல் துணை ஆணையா் ஈஸ்வரன், கோட்டாட்சியா் சாலை தவவளன், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் நடராஜன், சுரேஷ் பாபு, மாநகராட்சி துணை ஆணையா் வினோத், உதவி ஆணையா் சரவணன், உதவி நிா்வாக பொறியாளா் ஜெகஜீவ ராமன், வட்டாட்சியா்கள் விக்னேஷ், தனலட்சுமி, மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் மு. மதிவாணன் ஆகியோா் உடனிருந்தனா்.
