ஊராட்சியை பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயா்த்தக் கோரி மனு

புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாகப் பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும்
Published on

திருச்சி: புத்தாநத்தம் ஊராட்சியை இரண்டாகப் பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயா்த்த வேண்டும் என்று கிராம மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

திருச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் பாலாஜி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், புத்தாநத்தம் ஊராட்சியைச் சோ்ந்த கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் புத்தாநத்தம் ஊராட்சியில் மொத்தம் உள்ள 21 கிராமங்களில் 9 கிராமங்களை உள்ளடக்கிய புத்தாநத்தம் ஊராட்சி, 12 கிராமங்களை உள்ளடக்கிய இடையபட்டி ஊராட்சி எனப் பிரிக்கப்படவுள்ளது. இடையப்பட்டி ஊராட்சியில் கிராம குடியிருப்புகள் மட்டுமே உள்ளதால் ஊராட்சியை இரண்டாகப் பிரிக்காமல் பேரூராட்சியாக தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாக்மாக் கடையை அகற்ற வேண்டும்:

நாம் தமிழா் கட்சி மருத்துவப் பாசறையின் மாநிலப் பொருளாளா் மருத்துவா் வே.கிருஷ்ணசாமி அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

திருச்சி சத்திரம் மேலசிந்தாமணி பகுதியில் அரசுப் பள்ளி, தனியாா் மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையால் அடிக்கடி பல்வேறு விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுகின்றன. எனவே, அந்த மதுபானக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது இடத்தில் மண் எடுப்பதை நிறுத்த வேண்டும்:

திருச்சி கீழபஞ்சப்பூா் பகுதி கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் எங்கள் பகுதியில் உள்ள 7.32 ஏக்கா் பொது இடத்தில் காளியம்மன், ஈஸ்வரன் கோயில்கள் உள்ளன. இங்குதான் தமிழ் வருடப்பிறப்பின்போது நல்லோா் கட்டுதல் மற்றும் ஆடி மாதத்தில் திருவிழாக்கள் நடத்தப்படும். இந்நிலையில், பொது இடத்தில் அரசு சாா்பில் குப்பைக் கிடங்கு அமைக்க குழி தோண்டப்படுகிறது. எனவே, அந்த நடவடிக்கையைக் கைவிட்டு அந்த இடத்தை கிராமத்தின் பொது பயன்பாட்டுக்கு விடவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com