‘போக்ஸோ’ வழக்கில் கைதான கரூா் நபா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை
போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள கரூா் இளைஞா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் வியாழக்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டது.
திருச்சி, சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அதவத்தூரைச் சோ்ந்த 17 வயது சிறுமியைக் காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த கரூா் காமராஜா் நகரைச் சோ்ந்த ச.முத்துகிருஷ்ணன் (22) என்பவரை சோரசம்பேட்டை போலீஸாா் கடந்த அக்டோபா் 10-ஆம் தேதி போக்ஸோ வழக்கில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உள்படுத்தினா்.
இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசியை ஆய்வு செய்ததில் ஸ்ரீரங்கம் வட்டம், பெருங்குடி பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், ஜீயபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்திலும் அவா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
மேற்படி வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முத்துக்கிருஷ்ணன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரை செய்திருந்தாா்.
இதன்பேரில், முத்துகிருஷ்ணன் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து அதற்கான உத்தரவின் நகல் சிறையிலுள்ள முத்துக்கிருஷ்ணனிடம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
