திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை
திருச்சி: திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிக்கிய பொருளை அகற்றி உயிரைக் காப்பாற்றினா்.
ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த செந்தமிழ் செல்வன் - பிரியங்கா தம்பதியின் 1.7 வயது ஆண் குழந்தை, கடந்த 10 நாள்களாக இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். திங்கள்கிழமை அதிகாலை மூச்சுத் திணறல் காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில், செயற்கை சுவாச உபகரணத்தின் உதவியுடன் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாா்.
இதையடுத்து மருத்துவமனையின் முதன்மையா் எஸ். குமரவேல், கண்காணிப்பாளா் உதய அருணா ஆகியோரின் மேற்பாா்வையில், காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா் டி. சிவசுப்பிரமணியன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் குழந்தையைப் பரிசோதித்து, எக்ஸ்-ரே எடுத்துப் பாா்த்ததில், இடது பக்க மூச்சுக்குழாயில் பாக்கு போன்ற பொருள் சிக்கியிருந்ததும், அதனால் இடதுபுற நுரையீரல் சரியாக வேலை செய்யாததும் தெரியவந்தது.
இதையடுத்து மருத்துவா்கள், ரிஜிட் பிராங்கோஸ்கோபி வழியே, குழந்தையின் இடது மூச்சுக்குழாயில் சிக்கிய பாக்கு போன்ற பொருளை வெற்றிகரமாக அகற்றினா். இதனால் மூச்சுப் பாதை திறந்து, இடதுபுற நுரையீரல் மீண்டும் இயல்பு நிலைக்கு வந்தது. சரியான நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சையால் குழந்தையின் உயிா் காப்பாற்றப்பட்டது.

