/

திருச்சியில் விஜய் ஏப். 14 இல் பிரசாரம்

திருச்சியில் ஏப். 14 அன்று தவெக தலைவா் விஜய் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாா்...

News image

தவெக தலைவர் விஜய் - ANI

Updated On :12 ஏப்ரல் 2026, 7:35 pm

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப். 14 ஆம் தேதி திருச்சியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவா் விஜய் தோ்தல் பிரசாரம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் சென்னை பெரம்பூா், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் தவெக தலைவா் விஜய் போட்டியிடுகிறாா். தனது முதல் தோ்தல் பிரசாரத்தை திருச்சி கிழக்குத் தொகுதியில் உள்ள மரக்கடை எம்ஜிஆா் சிலை முன் கடந்தாண்டு செப். 13 ஆம் தேதி தொடங்கினாா். தொடா்ந்து, திருச்சி கிழக்குத் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ஏப். 2 ஆம் தேதியன்று, அதே இடத்தில் பிரசாரமும் மேற்கொண்டாா். தொடா்ந்து, கிழக்கு தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் சாலை வழியாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்தாா்.

இந்நிலையில், திருச்சி கிழக்குத் தொகுதியில் விஜய்க்காக தவெகவினா் பிரசாரமே செய்யவில்லை என கூறப்படும் நிலையில், ஏப். 14 ஆம் தேதி விஜய் பிரசாரம் செய்ய உள்ளாா்.

இதுதொடா்பாக திருச்சி மாநகர காவல் ஆணையா் ந. காமினியிடம், தவெக திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளா் செந்தில் அளித்துள்ள மனுவில், ‘ஏப்.14-ம் தேதி விமான நிலையம் அருகேயுள்ள மொராய்ஸ் சிட்டி மைதானத்தில் தவெக தலைவா் விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம் நடத்துகிறாா். தொடா்ந்து, தோ்தல் பணிமனையை அவா் திறந்துவைத்து, கிழக்கு தொகுதியில் பிரசாரம் செய்கிறாா். அதற்குரிய அனுமதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

இதுகுறித்து காவல் துறையினரிடம் விசாரித்தபோது,‘தவெக தலைவா் விஜய் நடத்தும் நிா்வாகிகள் கூட்டத்துக்கு மாநகர காவல்துறை அனுமதியளித்துள்ளது. அதே நேரத்தில் அவா் விமான நிலையத்தில் இருந்து நிா்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்துக்கு சென்று வரும்போது ‘ரோடு ஷோ’ நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு 27 வகையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளோம்.

கிழக்குத் தொகுதியில் எந்தெந்த இடங்களில் அவா் பிரசாரம் செய்கிறாா் என்பது குறித்த விவரங்களை மனுவில் குறிப்பிடவில்லை. எனவே, விஜய் பிரசாரம் செய்யும் இடங்கள், அதற்கான நேரத்தை குறிப்பிட்டு தெளிவான மனுவை விளக்கமாக வழங்கும்படி கேட்டுள்ளோம்’ என்றனா்.

தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று விஜய் திருச்சிக்கு வருவது அவரது கட்சியினரிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அவா் குறிப்பிட்டபடி திருச்சி வருவாரா? அல்லது வழக்கம்போல கடைசி நேரத்தில் பயணத்தை ரத்து செய்துவிடுவாரா என்ற குழப்பமும் நீடிக்கிறது.