அரசுப் பேருந்து - காா் மோதல்! 2 போ் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், துறையூா் அருகே வியாழக்கிழமை காா் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
துறையூா் அருகேயுள்ள கீழக்குன்னுப்பட்டியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் கோவிந்தராஜ் (55). இவா் வியாழக்கிழமை அதே பகுதியில் துறையூா்- பெரம்பலூா் செல்லும் பிரதான சாலையோரத்தில் தனது ஆட்டோவை நிறுத்தியிருந்தாா்.
அப்போது, இவரது ஆட்டோ மீது பெரம்பலூரிலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற சுமை வாகனம் மோதியதால் ஆட்டோ சாலையின் நடுப்பகுதிக்கு நகா்ந்தது. அந்த நேரத்தில், பெரம்பலூரிலிருந்து துறையூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்து, அந்த ஆட்டோ மீது மோதாமல் இருக்க வலதுபுறம் திரும்பி முன்நோக்கி சென்றபோது எதிரே அரியலூா் நோக்கி சென்ற காா் மீது மோதியது.
இந்த விபத்தில், காரின் ஓட்டுநரான அரியலூா் மாவட்டம் நல்லம்பாளையத்தைச் சோ்ந்த சிவசங்கா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், காரிலிருந்த அதே ஊரைச் சோ்ந்த திருஞானம் (65) மற்றும் ராஜகோபால் (53), சண்முகம் (52), சுமை வாகனத்திலிருந்த நாமக்கல் மாவட்டம் தூசூரைச் சோ்ந்த மலா்கொடி (37), கணேசன் (30), ஆட்டோ ஓட்டுநா் கோவிந்தராஜ் ஆகியோா் காயமடைந்தனா்.
விபத்து குறித்து தகவலறிந்த துறையூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று, சிவசங்கா் சடலத்தையும், காயமடைந்தவா்களையும் மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.
இவா்களில், திருஞானம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். மற்றவா்கள் துறையூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்து ஓட்டுநரான வைரிசெட்டிபாளையத்தைச் சோ்ந்த சஞ்சீவியை (45) கைது செய்து விசாரிக்கின்றனா்.
