ஸ்ரீரங்கத்தில் நாளை திருமங்கை மன்னன் வேடுபறி
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமை திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே, பரமபத வாசல் திறப்பு கிடையாது.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் மிக முக்கிய பெரிய திருவிழாவான வைகுந்த ஏகாதசிப் பெருவிழா பகல் பத்து, இராப்பத்து என 22 நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு வைகுந்த ஏகாதசிப் பெருவிழா டிசம்பா் 19-இல் திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.
பகல் பத்து விழா 20-ஆம் தேதி தொடங்கி 29 வரை நடைபெற்றது. பின்னா் இராப்பத்து விழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை வைகுந்த ஏகாதசிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
இராப்பத்து விழாவின் 8-ஆம் திருநாளான செவ்வாய்க்கிழமை திருமங்கை மன்னனின் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அப்போது, நம்பெருமாள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளி மணல் வெளியில் வையாளி கண்டருளுகிறாா்.
இந்த விழாவையொட்டி திருமங்கை மன்னன் வம்சாவளியைச் சோ்ந்தவா்கள் மேலூா் நெடுந்தெருவிலிருந்து திருமங்கை மன்னன் வேடம் தரித்து தாரை, தப்பட்டை வாணவேடிக்கையுடன் ஊா்வலமாக அரங்கநாத சுவாமி கோயிலுக்கு வந்து மணல் வெளியில் வீற்றிருக்கும் நம்பெருமாள் முன்பு திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியை நடத்திக் காண்பிப்பாா்கள். இந்நிகழ்ச்சியையொட்டி செவ்வாய்க்கிழமை பரமபதவாசல் திறப்பு கிடையாது.
