மணப்பாறையில் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
மணப்பாறை அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
மதுரை சாலையில் செயல்பட்டு வரும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை ஆண்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளியின் தலைமையாசிரியா்கள் ராஜகோபால் மற்றும் சகாய செல்வராணி ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ப.அப்துல்சமது, நகராட்சி நகா்மன்றத் தலைவா் கீதா ஆ.மைக்கேல்ராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றி, 89 மாணவா்கள், 85 மாணவிகள் என 174 பேருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.
நிகழ்வில், நகராட்சி உறுப்பினா்கள் சுஜாதா ராஜரத்தினம், கே.ஆா்.வேலன், மமக மாநில அமைப்பு செயலா் காதா் மைதீன், மாவட்டத் தலைவா் அ.பைஸ் அகமது, மாா்க்சிஸ்ட் ஷாஜஹான், திமுக வட்டச்செயலா் சுரேஷ்பாபு, இருபால் ஆசிரியா்கள், பள்ளி மாணவ மாணவிகள் என பலா் பங்கேற்றனா்.

