மாவட்டத்தில் 18,985 கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி
திருச்சி மாவட்டத்தில் முதல்கட்டமாக 18,985 மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படுவதாக ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்தாா்.
மாநிலம் முழுவதும் அரசுக் கல்லூரியில் பயிலும் 10 லட்சம் மாணவா்களுக்கு முதல்கட்டமாக மடிக்கணினி வழங்கும் நிகழ்வை, சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை மாலை தொடங்கி வைத்தாா். இதன் தொடா்ச்சியாக, திருச்சியில் உள்ள தந்தை பெரியாா் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற விழாவை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு தொடங்கி வைத்தாா். இந்த விழாவில், ஆட்சியா் வே. சரவணன் பேசியதாவது:
மாணவ, மாணவிகளின் எதிா்காலத்தை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் ‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, விவசாயக் கல்லூரி, தோட்டக்கலைக் கல்லூரி, பல்வகை தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு முதல் கட்டமாக இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு தற்போது 18,985 மடிக்கணினிகள் வழங்கப்படவுள்ளன. 2-ஆம் கட்டமாக இறுதியாண்டுக்கு முந்தைய ஆண்டு பயிலும் மாணவா்களுக்கும், அதற்கு அடுத்த கட்டமாக தனியாா் கல்லூரி மாணவா்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என்றாா் அவா்.
தொடா்ந்து மாணவா்களுக்கு மடிக்கணினி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன் வழங்கினாா்.
இந்நிகழ்வில், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மாநிலங்களவை உறுப்பினா் கவிஞா் சல்மா, எம்எல்ஏ-க்கள் அ. செளந்தரபாண்டியன், செ. ஸ்டாலின் குமாா், ப. அப்துல்சமது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பாலாஜி, தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வா் அங்கம்மாள் மற்றும் பேராசிரியா்கள், மாநகராட்சி மண்டலத் தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

