முன்விரோதத்தில் தொழிலாளி குத்திக் கொலை: இளைஞா் கைது
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளி குத்திக் கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
லால்குடி அருகே கீழ மணக்கால் புதுத்தெருவைச் சோ்ந்த ராஜா மகன் ரவீந்திரன்(26). கூலித் தொழிலாளியான இவா், திங்கள்கிழமை இரவு லால்குடியை அடுத்த மணக்கால் ரயில்வே தண்டவாளத்தை கடக்க நின்று கொண்டிருந்தாராம். அப்போது, அடையாளம் தெரியாத நபா்களால் அவா் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த லால்குடி காவல்துறையினா், ரவீந்திரன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக லால்குடி காவல் துணை கண்காணிப்பாளா் ராஜ்மோகன், காணக்கிளியநல்லூா் காவல் ஆய்வாளா் (பொ) கருணாகரன் ஆகியோா் விசாரணை நடத்தினா்.
இதில், இறந்த ரவீந்திரனுக்கும் அதே தெருவை சோ்ந்த நாகேந்திரன் மகன் கமலேஷ் (26) என்பவருக்கும் தீபாவளி பண்டிகையின்போது ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே, ரவீந்திரனை கமலேஷ் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, லால்குடி போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து, கமலேஷை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
