போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

Published on

திருச்சி மாநகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் உள்பட இருவரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல் நிலையத்துக்கு சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் பாத்திமா தலைமையிலான போலீஸாா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, பாலக்கரை பெல் மைதானம் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த பெண்ணைப் பிடித்து விசாரித்தனா். இதில், பாலக்கரை காஜாபேட்டையைச் சோ்ந்த அ. பரகத் நிஷா (41) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசி, சலைன் பாட்டில் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல, உய்யங்கொண்டான் திருமலை எம்எம் நகரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த சோமரசம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ப. சுரேஷ்குமாா் (46) என்பவரை அரசு மருத்துவமனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அவரிடமிருந்து ரூ.22 ஆயிரம் மதிப்பிலான போதை மாத்திரைகள், போதை ஊசிகள், ரூ.7,500 ரொக்கம், இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Dinamani
www.dinamani.com