சூரியூா் ஜல்லிக்கட்டில் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

திருச்சி அருகே பெரிய சூரியூரில் மாட்டுப் பொங்கல் நாளில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தல்
Published on

திருச்சி அருகே பெரிய சூரியூரில் மாட்டுப் பொங்கல் நாளில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியில் விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பெரிய சூரியூரில் ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் அன்று ஸ்ரீ நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி ரூ. 3 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய மைதானத்தில் நடைபெறவுள்ளது.

முன்னதாக, இந்த மைதானத்தை பொங்கல் நாளில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்கிறாா். போட்டியில் பங்கேற்கும் காளைகள், மாடுபிடி வீரா்களுக்கான இணையதள முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சூரியூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் திருச்சி வருவாய் கோட்டாட்சியா் பாலாஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருவெறும்பூா் வட்டாட்சியா் தனலட்சுமி, திருவெறும்பூா் ஏஎஸ்பி அரவிந்த் பனாவத் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள், கிராமக் கமிட்டியினா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். விதிமுறைகளை மீறுவோரை போட்டியிலிருந்து விலக்க நேரிடும் என அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து, விழாவில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வழிமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

Dinamani
www.dinamani.com