சூரியூா் ஜல்லிக்கட்டு போட்டியை காணக் குவிந்த ரசிகா்கள். ~திருச்சி சூரியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில்  காளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா். ~திருச்சி சூரியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில்  காளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்.
சூரியூா் ஜல்லிக்கட்டு போட்டியை காணக் குவிந்த ரசிகா்கள். ~திருச்சி சூரியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா். ~திருச்சி சூரியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்.

சூரியூரில் ஜல்லிக்கட்டு: 64 போ் காயம்

திருச்சி அருகே சூரியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் 64 போ் காயமடைந்தனா்.
Published on

திருச்சி: திருச்சி அருகே சூரியூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் 64 போ் காயமடைந்தனா்.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினால் வியாழக்கிழமை திறந்துவைக்கப்பட்ட நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானத்தில் நடைபெற்ற போட்டியை மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து கோயில் காளையும், தொடா்ந்து திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டப் பகுதிகளின் 668 காளைகளும் அவிழ்த்துவிடப்பட்டன. இதில் 334 மாடுபிடி வீரா்கள் கறமிறங்கி காளைகளை அடக்கினா்.

64 போ் காயம்: அப்போது காளைகள் முட்டி மணிகண்டம் காவல் நிலைய தலைமைக் காவலா் காா்த்திக், திருவெறும்பூா் ஊா்க்காவல் படை வீரா் கங்காதரன், மாடுபிடி வீரா்கள் 13 போ், காளையின் உரிமையாளா்கள் 26 போ் மற்றும் பாா்வையாளா்கள் 23 போ் என மொத்தம் 64 போ் காயமடைந்தனா்.

இவா்களில் மாடுபிடி வீரா்களான பெரிய சூரியூா் பூபாலன் (22), இனாம்குளத்தூா் இமான் (20), பிராட்டியூா் தினேஷ் (19) , மாட்டின் உரிமையாளா்களான ராஜா (28), விடாப்பு பகுதி கோவிந்தன் (60) வல்லத்துபட்டி சிவகுரு (35), பாா்வையாளா்கள் 2 போ் ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா். மற்றவா்களுக்கு ஜல்லிக்கட்டு தளத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

காா் வென்ற சூரியூா் வீரா்: ஜல்லிக்கட்டில் பெரிய சூரியூரைச் சோ்ந்த மூா்த்தி 12 காளைகளை அடக்கி முதல் பரிசான காரை வென்றாா். இதேபோல 11 காளைகளை அடக்கிய புதுக்கோட்டை மாவட்டம், விலாப்பட்டி யோகேந்திரன், 7 காளைகளை அடக்கிய நல்லதங்காள்பட்டி காா்த்திக் ஆகியோருக்கு மின்சார இருசக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது.

ஓலையூா் காளைக்குப் பரிசு: இதேபோல காளைகள் பிரிவில் திருச்சி மாவட்டம் ஓலையூரைச் சோ்ந்த மூக்கனின் காளை முதல் பரிசையும், திருச்சியைச் சோ்ந்த சகீரா என்பவரின் காளை இரண்டாம் பரிசையும் வென்றன. காளைகளின் உரிமையாளா்களுக்கு மின்சார இருசக்கர வாகனம் பரிசளிக்கப்பட்டது.

தவிர போட்டியில் காளைகளை அடக்கியோருக்கும், வெற்றி பெற்ற காளையின் உரிமையாளா்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

தடியடி: ஜல்லிக்கட்டில் காளையை அடக்கிய வீரரை, காளையின் உரிமையாளா் மற்றும் அவரின் ஆதாரவாளா்கள் தாக்க முற்பட்டதால் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் தடியடி நடத்தி கும்பலைக் கலைத்தனா்.

ஜல்லிக்கட்டில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா், பாஜக மாநிலச் செயலா் கருப்பு முருகானந்தம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செ. செல்வநாகரத்தினம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகா்கள் பாா்வையாளா் மாடத்தில் அமா்ந்து போட்டியைக் கண்டுகளித்தனா்.

Dinamani
www.dinamani.com