பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு

திருவெறும்பூா் அருகே பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 16-ஆம் தேதி நடத்தப்பட உள்ளநிலையில் முதல் பரிசாக காா்
திருச்சி பெரிய சூரியூா் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றுவந்த முன்னேற்பாடு பணிகள்.
திருச்சி பெரிய சூரியூா் ஜல்லிக்கட்டு புதிய மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றுவந்த முன்னேற்பாடு பணிகள்.
Updated on

திருச்சி: திருவெறும்பூா் அருகே பெரிய சூரியூா் புதிய மைதானத்தில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டி வரும் 16-ஆம் தேதி நடத்தப்பட உள்ளநிலையில் முதல் பரிசாக காா் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மைதானத் திறப்புவிழாவை முன்னிட்டு தீவிர முன்னேற்பாடு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

திருவெறும்பூா் அருகே பெரிய சூரியூரில் ஸ்ரீ நற்கடல்குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டுப் போட்டி திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டியாக வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். கிராமத் திடலில் போட்டி நடத்தப்பட்டு வந்த நிலையில், ஜல்லிக்கட்டு மைதானம் அமைத்துத் தரக் கோரி தொகுதி எம்எல்ஏவும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் ஊா் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதனடிப்படையில், ரூ. 3 கோடியில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு, இதனை தமிழக துணை முதல்வரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வரும் 15-ஆம் தேதி பொங்கலன்று திறந்து வைக்க உள்ளாா். இந்த மைதாதனத்தில் வரும் 16-ஆம் தேதி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்ட ஆட்சியா் வே. சரவணன், அதிகாரிகளுடன் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை நேரில் ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து பெரிய சூரியூா் கிராமக் குழுவினா் கூறுகையில், புதிய மைதானத்தில் களமிறங்க காளைகளும், மாடுபிடி வீரா்களும் உற்சாகமாக உள்ளனா். நிகழாண்டு ஜல்லிக்கட்டுப் போட்டியில் வெற்றிபெறும் வீரருக்கு முதன்முறையாக முதல் பரிசாக காா், இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்படும். களம் காணும் அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி, சேலை பரிசாக வழங்கப்படும் என்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com